நம் நாட்டுத் தந்தைத் திரு. லீ குவான் இயூ மறைந்து ஓராண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், அவரை நினைவு கொள்ளும் வகையில் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அவர் நினைவு நாளுக்குச் சரியாகப் பத்து நாட்கள் முன்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை 13ஆம் தேதி 'லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்' நூல் வெளியிடும் அவர் பெருமை பேசும் கவியரங்கமும் நடைபெற்றன. காலாங் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழுவும் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய அந்த விழாவில் அரங்கம் நிரம்பிய இலக்கிய ஆர்வலர்கள் சூழ்ந்திருந்தனர். நூலின் முதல் படியைத் அருண்மகிழ்நன் வெளியிட, அதனைக் கவிஞர் முருகடியான் பெற்றுக் கொண்டார். நூல் பற்றி டாக்டர் திண்ணப்பன் நல்லதொரு உரை வழங்கினார். மதுரைப் பொற்கிழிக் கவிஞர் சொ சொ மீ ஐயா தலைமையில் நடைபெற்ற ஒன்றரை மணி நேரக் கவியரங்கம் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
தலைவரின் கவி வீச்சுக்குத் தோதாக, சிங்கைக் கவிஞர்கள் இன்பா, வீர விஜயபாரதி, சீர்காழி செல்வராஜ், இராம வைரவன், ந.வீ.விசயபாரதி, கி.கோவிந்தராசு ஆகியோர் முறையே லீ குவான் இயூ எங்களுடைய தலைவர், ஆசான், தந்தை, தாய், காவலர், தோழர் என்ற தலைப்புகளில் கவி பாடினார்கள்.
'லீ குவான் இயூ பிள்ளைத்தமிழ்' நூலாசிரியர் வரதராசன் (இடது) உடனிருக்க அருண் மகிழ்நன் (நடுவில்) அந்நூலை வெளியிட, கவிஞர் முருகடியான் (வலது) பெற்றுக்கொண்டார். படம்: வரதராசன்.