எந்தத் துறையாக இருந்தாலும் பெண்கள் வளர்ந்து மேலே வருவது கடினம் என்கிறார் முன்னாள் நாயகி 'குத்து' ரம்யா. பெங்களூருவில் நடைபெற்ற மகளிர் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், பெண்கள் தங்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராகப் பொங்கி எழவேண்டும் என்றார். "பழங்காலப் பெண்கள் வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இப்போதுள்ள பெண்கள் புதிய சவால்களைச் சந்திக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிராக பெண்கள் ஒன்று திரண்டு போராட வேண்டியது அவசியம்.
"நான் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். அதன்படி நான் ஒரு முறை எம்.பி.யாகப் பணியாற்றி இருக்கிறேன். எந்தப் பதவியைக் கொடுத்தாலும் நான் ஏற்பேன். என்னால் முடிந்தவரை சிறப்பாகப் பணியாற்றுவேன். இன்று எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் வளர்ந்து மேலே வருவது கடினமான விஷயம். நான் திரைப்பட நடிகையாக இருப்பதால் அரசியலில் வளர்வது அவ்வளவு கடினமாக இல்லை," என்றார் ரம்யா.