முழுமையான கல்வித் தேர்ச்சிக்கு முன்மாதிரிகள்

இளம் பருவத்திலிருந்தே சமயக் கல்வியைக் கற்பதை பெரும் பான்மையானோர் வாழ்வின் அங்கமாக கொண்டுள்ளார்கள். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து சமயத்தைச் சார்ந்தவர்களும் வாழ்க்கை நெறிகளையும் நற் பண்புகளையும் அறிந்துகொள்ள முயற்சி எடுப்பதை அனைவரும் பார்த்துள்ளோம்; அந்தப் பாதை யைக் கடந்து வந்திருப்போம். அந்த வரிசையில், இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த இருவர் மாபெரும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி சாதனை புரிந்து உள்ளனர்.

உயர்நிலை மூன்றில் பயிலும் 14 வயது அஃபீஃப் முஹம்மது ரய்யானும் 13 வயது முஹம்மது ஹம்சாவும் இஸ்லாமிய புனித நூலான குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்துள்ளனர். பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெறும் மதரஸா எனும் சமயக் கல்வியின் ஓர் அங்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே பகுதி நேரமாக இந்த முயற்சியில் ஈடுபட்டு உன்னத தேர்ச்சிப் பெற்றவர்கள் என்ற பெருமையை இந்த இருவரும் பெற்றுள்ளனர். குர்ஆனை மனனம் செய்து முடித்தவர்களுக்கு ‘ஹாஃபிழ்’ எனும் பட்டம் சூட்டப்படும். ‘முயிஸ்’ எனும் இஸ்லாமிய சமய மன்றத்தால் குர்ஆன் மனனம் செய்வதை ஊக்குவிக்க அமைக்கப்பட்டுள்ள ‘தாருல் குர்ஆன்’ நிலையத்தால் இரு மாணவர்களும் சோதிக்கப்பட்டு அந்நிலையத்தின் அங்கீகரிக்கப் பட்ட தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.