தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத தீ

எதிர்பார்த்ததைப் போலவே தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத தீயைப் பற்றவைத்துவிட்டது ஐஎஸ் அமைப்பு. ஈராக்கிலும் சிரியாவிலும் தளம் கொண்டு இருந்தாலும் உலகத்தையே தனது பயங்கரவாதப் பசிக்கு இரையாக்க வேண்டும் என்ற அந்த அழிவு சக்தியின் ஆசைக்கு கடைசியாக இப்போது இந்தோனீசியா இலக்காகி இருக்கிறது. பிரான்ஸ், துருக்கி என்று வரிசையாக பல நாடுகளைப் பதம்பார்த்துவிட்டு இப்போது இந்த வட்டாரத்தில் அந்த அமைப்பு கைவரிசை காட்டியுள்ளது.

உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் எழுவர் மாண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல் களைப் பார்க்கையில், ஐஎஸ் அமைப்பு இனி மத்திய கிழக்கில் மட்டும் தலைவிரித்து ஆடும் அமைப்பு அல்ல என்பது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. சமயப் போர்வை யில், மிகவும் வலுவான இணையப் பிரசார பலத்தைக் கொண்டுள்ள அந்த அமைப்பு, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இளையர்களைத் தன் கவர்ச்சி வலையில் விழவைத்து அவர்களைக் கொண்டு உலகில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டி இருக்கிறது.

'உலக இஸ்லாமிய அரசு' ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படும் ஐஎஸ் அமைப்பு, இந்த முயற்சி யில் வெற்றிபெற அந்த அந்த வட்டாரங்களில் செயல்படு கின்ற அல்லது செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகளைத் திறம்பட பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது. இந்தோனீசியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு இப்போது சிரியாவில் இருப்பதாக நம்பப்படும் உள்ளூர் தீவிரவாதி பஹ்ருல் நியாம், கதீபா நுசாத்ரா என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதை தென்கிழக்கு ஆசியாவின் ஐஎஸ் அமைப்பாக மாற்ற மலேசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் செயல்பட்டு வருகிறான். இவன்தான் ஜகார்த்தா பயங்கரவாதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதேபோல மலேசியாவிலும் பல்வேறு தரப்பினர் செயல் பட்டு வருவதாகத் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா அதிக முஸ்லிம்களைக் கொண்ட பகுதி. ஆனாலும் அவர் கள் அமைதி விரும்பிகள். அவர்கள் மத்தியில் பிரச்சினை களை, பிளவுகளைக் கிளப்பிவிட்டு குளிர்காய விரும்பு கிறது ஐஎஸ் அமைப்பு.

"ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத மிரட்டல் கணிசமான அளவுக்கு அதிகரித்து இருக்கிறது," என்று சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றத்தை தொடங்கிவைத்துப் பேசிய சிங்கப்பூர் அதிபர் டாக்டர் டோனி டான் கெங் யாம் தெரிவித்து இருக்கிறார். "பல இடங்களிலும் தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன. நாம் மட்டும் விதிவிலக்கு அல்ல," என்று அவர் எச்சரித்து இருக்கிறார். வேறு நாடுகளைப்போல் அல்ல. சிங்கப்பூரில் பயங்கர வாதத் தாக்குதல் நடந்தால் உயிருடற் சேதத்தோடு போய் விடாது. சிங்கப்பூரின் உயிர்நாடியான, விலைமதிப்பு இல்லாத இன, சமய ஐக்கியம் பாழ்பட்டுவிடும் என்றும் அதிபர் அபாய சங்கு ஊதி இருக்கிறார்.

எப்படியோ இந்த வட்டாரத்தில் பயங்கரவாத தீயைப் பற்றவைத்துவிட்டது ஐஎஸ் அமைப்பு. அந்தத் தீயைப் பரவ விடாமல் முற்றிலும் அணைத்துவிட வேண்டும். இதற்கு வட்டார அளவில் செம்மையான, ஐக்கியமான முயற்சி தேவை. அண்மையில் இந்தோனீசியாவுக்குச் சென்று இருந்த சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இதைத்தான் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தைத் துடைத்து ஒழிக்க மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தொடர்ந்து ஒத்துழைத்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அப்படிச் செயல்பட அந்த நாடுகள் தயார் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.

உலகம் பாராட்டும் வகையில் அரிய பல சாதனைகளு டன் பொன்விழாவைக் கொண்டாடிவிட்டு அடுத்த 50 ஆண்டுகாலப் பயணத்தைத் தொடங்கி இருக்கும் சிங்கப்பூர், தான் எதிர்நோக்கும் சவால்களில் பயங்கரவாத மிரட்டல் முக்கியமான ஒன்று என்று பிரகடனப்படுத்தி இருக்கிறது. அந்தச் சவாலை திறம்பட சமாளிக்க அது தன்னால் முடிந்த அளவுக்குப் பாதுகாப்பை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. என்றாலும், அதிபர் டோனி டான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திக் கூறியதைப்போல, சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டியது கட்டாயமானது என்பதை நாம் மனதில் கொள்வோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!