இளையருக்கு காத்திருக்கும் நிதியுதவி

எஸ். வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூர் தேசிய இளையர் மன்றத்தின் ‘யங் சேஞ்மேக்கர்ஸ்’ (Young ChangeMakers) நிதி பல இளையர்களின் கனவை நனவாக்கியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இளையர்கள் மேற்கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட முயற்சிகளுக்கு இந்த நிதி கை கொடுத்து வருகிறது. 15லிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தனிப்பட்ட முறையிலோ குழுக்களாகவோ இந்த நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு $5,000 வரை அல்லது திட்டத்துக்கு ஏற்படும் மொத்த செலவில் 80 விழுக்காடு வரை நிதி வழங் கப்படலாம். சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வழியில் நன்மை பயக்கும் திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. நிதி கிடைக்கப்பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதனைத் தவிர்த்து, வேறு நிபந்தனைகள் இல்லை என்று ‘யங் சேஞ்மேக்கர்ஸ்’ திட்டத்தை வழி நடத்தும் 30 வயது திரு யுவன் மோகன் தெரிவித்தார். “இந்த நிதி மூலம் சுகாதாரம், சுற்றுச்சுழல், சமுதாயம், கலை கள், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த முயற்சிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் உதவி செய்கிறோம். இந்த நிதியைப் பயன்படுத்த பல இந்திய மாணவர்களும் இளையர் அமைப்புகளும் முன் வராததுதான் குறையாக உள்ளது,” என்றார் திரு யுவன். திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறியதும் நிதித் தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் நிதித் தொகையின் ஒரு பகுதி முன்கூட்டியே வழங்கப்படுவதும் உண்டு.

‘கொலுசு’ என்ற குறும் படத்தைத் தயாரித்த ‘பிளேக் ஸ்பைஸ் மீடியா’ நிறுவனம் இந்த நிதித் திட்டம் வழி பயனடைந் துள்ளது. இந்த முயற்சிக்கு மொத்தம் $3,000 நிதி வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டது. குறும் படத்தைத் தயாரிக்க வகை செய்ய $1,500 முன்கூட்டியே வழங்கப்பட்டது. “பள்ளிகளிலும் கற்பித்தல் அமைப்புகளிலும் மாணவர்கள் இக்குறும்படத்தைக் கொண்டு அறிவுபூர்வமான கலந்துரை யாடலில் ஈடுபடவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மாணவர்களின் கற்றலுக்கு நன்மை தரும் இந்த முயற்சிக்கு சிங்கப்பூர் தேசிய இளையர் மன்றத்தின் நிதி உதவிக்கரம் நீட்டியுள்ளது,” என்றார் ‘பிளேக் ஸ்பைஸ் மீடியா’வின் ஆக்கப் பூர்வ இயக்குநர் திரு சலீம் ஹாடி, 37. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை நடத்தும் ‘சங்கே முழங்கு’ என்ற மேடை நாடக நிகழ்ச்சியும் இந்த நிதியால் பயனடைந்துள்ளது.

“சிங்கப்பூரின் பொன்விழா வின்போது (SG50) ‘சங்கே முழங்கு’ நடத்தப்பட்டதால் நிதியைப் பெற மற்ற நிகழ்ச்சி களுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. “அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு நிதி உதவி கிடைத்தபோது, இளையர்களின் முயற்சிகளுக்கு மன்றம் பக்க பலமாக இருக்கும் என்பது உறுதியாக தெரிந்தது. “இனி வருங்காலங்களில் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் முயற்சிகளில் ஈடுபடும்போது அந்தத் திட்டங்களை வெற்றி கரமாகச் செயல்படுத்த மன்றத்தின் உதவியை நாடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,” என்றார் சங்கே முழங்கு 2015இன் நிதித்திரட்டு குழுவின் தலைவரான குமாரி சுகன்யா பாலு, 23. சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்களில் ஈடுபட விழையும் இளையர்கள் ஏறத்தாழ ஆறு வாரங்களுக்கு முன்பாகவே மன்றத்தின் நிதியுதவியைப் பெற விண்ணப்பம் செய்வது நல்லது என்றார் மன்றத்தில் தொண்டூ ழியம் செய்யும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவி குமாரி வி. ஜனனி, 21. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை நிதி உதவிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ‘ஓப்பன்=மைக்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விண்ணப்பங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நிதியுதவி வழங்கப்படுகிறது.