வாகை சூடிய மஞ்சித் சிங், வெள்ளி வென்ற ஜான்சன், டூட்டீ

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 200 மீட்டர் திடல்தட போட்டியிலும் டூட்டீ சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் போட்டியில் டூட்டீ சந்த் முதல் 100 மீ. தூரம் வரை முன் னிலையில் இருந்தார். பிறகு அவ ரால் அதைத் தக்க வைக்கமுடிய வில்லை. எனவே 23.20 வினாடிகளில் தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் டுட்டீ சந்த். ஆசியப் போட்டியில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் பிரிவில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. 22 வயது டுட்டீ சந்த், அண் மையில் நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் போட்டியில் 11.32 வினாடி களில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பஹ்ரைனின் எடிடியாங் 22.96 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

வீ யோங்க்லி வெண்கலம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் இதிலும் அதே இடத்தைப் பிடித்தனர். நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 800 மீட்டர் திடல்தட போட்டியில் இந்திய வீரர்கள் மஞ்சித் சிங், ஜான்சன் ஜின்சன் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி வென்றனர். பந்தய தூரத்தை மஞ்சித் சிங் ஒரு நிமிடம் 46.15 வினாடிகளில் கடந்து தங்கத்தைக் கைப்பற்றி வாகை சூடினார். இன்னொரு இந்திய வீரர் ஜான்சன் ஜின்சன் ஒரு நிமிடம் 46.35 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தைச் சொந்தமாக்கினார்.

கத்தார் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அபுபக்கர் ஒரு நிமிடம் 46.38 விநாடிகளில் ஓடி வெண் கலப்பதக்கம் பெற்றார். டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தி யாவின் அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் சீனா வின் வாங்=சன் இணையை இந்தி யாவின் ஷரத் கமலும் மனிகா பத்ராவும் எதிர்கொண்டனர். இந்திய இணைக்குக் கடும் நெருக்கடியை அளித்த சீன இணை, 11-9, 11-5, 11-13, 11-4, 11-8 என்கிற செட் கணக்கில் அரையிறுதிச் சுற்றை வென்றனர். இதனால் இந்திய இணை வெண் கலப் பதக்கம் வென்றது.