சிறுவனை தத்தெடுத்த காவல் உதவி ஆணையர்

சென்னை: பெற்றோரை இழந்து தவித்த 13 வயது சிறுவனைக் காவல்துறை உதவி ஆணையர் தத்தெடுத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கோவிந்தராஜன், பரிமளா தம்பதியரின் ஒரே மகனான கார்த்திக் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கோவிந்தராஜன் உடல் நலக் குறைவு காரணமாக இறந்துபோனதால் கார்த்திக் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் தனியே வசித்து வந்த பரிமளாவை அண்டை வீட்டைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டார்.

இதுகுறித்து காவல் உதவி ஆணையர் பால முருகன் விசாரணை நடத்தியபோது கார்த்திக் குறித்து தெரிய வந்தது. விடுதிக்குச் சென்ற போலிசார் சிறுவனிடம் விஷயத்தைக் கூறாமல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவனது தாய் கொலை செய்யப்பட்ட விவரத்தை பாலமுருகன் தெரிவித்தபோது சிறுவன் பயத்தில் உறைந்து போயுள்ளான். கார்த்திக்கின் சோகம் போலிசாரையும் கலங்கச் செய்துள்ளது. இந்நிலையில் வீடு திரும்பியபின் தன் மனைவியிடம் கலந்து பேசிய பாலமுருகன், கார்த்திக்கை தத்தெடுக்க முடிவு செய்தார். அவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இந்த முடிவை எடுத்தமைக்காக போலிசார் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.