‘பொருளியலுக்கு ‘ஃபாரஸ்ட் சிட்டி’ பங்காற்றியுள்ளது’

இஸ்கந்தர் புத்திரி: கேலாங் பாட்டாவில் பல பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படும் ‘ஃபாரஸ்ட் சிட்டி’ குடியிருப்பு வட்டாரம் ஜோகூரின் பொருளியலுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பங்காற்றியுள்ளது என்று ஜோகூர் முதல்வர் ஓஸ்மான் சாபியான் தெரிவித்தார். ‘கண்ட்ரி கார்டன் பசிபிக்வியூ’ எனும் நிறுவனம் மேற்கொண்டு வரும் அந்தத் திட்டம் இதுவரை மாநிலத்துக்கு வரியாகவும் டிவி டெண்டாகவும் 630 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. மத்திய அரசும் இதன் மூலம் பலன் அடைந்துள்ளது. நிறுவன வரி, தீர்வை, கட்டணம் ஆகியவற்றுக்கு அந்த நிறுவனம் 309 மில்லியன் ரிங்கிட் வழங்கி யுள்ளது என்று அவர் விளக்கினார்.

“ஆனால் அண்மைய காலமாக உள்ளூர் ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் திட்டத்தைப் பற்றி பலருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது,” என்றார் திரு ஒஸ்மான். இவ்வாண்டு ஜூலை வரையில் ‘கண்ட்ரி கார்டன் பசிபிக்வியூ’ நிறுவனம் அந்தத் திட்டத்தில் 11.5 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்துள்ளது. மேலும் உள்ளூர் ஒப்பந்த தாரர்கள் மூலம் 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வேலை வாய்ப்புகளை அது உருவாக்கி யிருக்கிறது என்று ஜோகூர் முதல் வர் சொன்னார்.