1.5 கிலோ போதைப்பொருள் சிக்கியது

செவ்வாய்க்கிழமை அன்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில் கிட்டத்தட்ட $102,000 மதிக்கத்தக்க 1.5 கிலோ கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. சோதனையின்போது ஐந்து ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலின் சந்தேகத்தில் துவாஸ் சவுத் அவென்யூ ஒன்றில் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றபோது மாலை சுமார் 5.45 மணியளவில் இரு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் தென்பட்டன. ஓட்டுநர்கள் சந்தித்துக்கொண்டு பின்னர் சிறிது நேரம் கழித்துப் பிரிந்து தம்தம் வாகனங்களுக்குச் சென்றனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடமிருந்து போதைப்பொருளையும் பணத்தையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து இருவரின் வீடுகளும் சோதனை இடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.