ஜப்பானில் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

தோக்கியோ: ஜப்பானில் ஹொக்கைடோ தீவில் வியாழக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில் தேடுதல் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் புதையுண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படும் வேளையில் இன்னும் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹொக்கைடோ தீவில் 1.6 மில்லியன் பேருக்கு இன்னும் மின்சார விநியோகம் கிடைக்க வில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஜப்பானில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரு இயற்கைப் பேரிடர் களால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில் ஜப்பானின் மேற்குக் கடலோரப் பகுதியை கடும் சூறாவளி தாக்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஹொக்கைடோ தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது வெளி யேறிய ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் அன்றைய இரவுப் பொழுதைக் கழித்ததாகக் கூறப்பட்டது.

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின்போது இடிந்துவிழுந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே காணாமற்போனவர்களைத் தேடும் பணியில் ஜப்பானிய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்ததாக ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இன்னும் 26 பேரைக் காணவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம்: இபிஏ