ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: ஒரே நாளில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் மலேசியா வில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 36 வயதான சாகிப் அக மது என்பவரின் பெட்டியில் இருந்த மின்சார வயர்களைக் கண்ட அதிகாரிகளுக்குச் சந்தே கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவற்றைத் தீவிரமாக ஆய்வு செய்தபோது செம்புக் கம்பிகளுக்குப் பதி லாகத் தங்கத்தினாலான கம்பி களை அவர் கொண்டு வந்தது அம்பலமானது. அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோல் துபாயிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த காளிதாஸ் (39 வயது) என்பவரும் அதிகாரிகளிடம் சிக்கினார். இருவரிடமும் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.