பாஜக தலைமையகம் முன்பு போராட்டம் நடத்த முயற்சி: மாணவி நந்தினி மீண்டும் கைது

சென்னை: பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைமையகம் முன்பு போராட்டம் நடத்தச் சென்ற சட்டக் கல்லூரி மாணவியை சென்னை போலிசார் கைது செய்துள்ளனர். இனி பாஜக, மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாக அவர் தெரி வித்துள்ளார். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தனது தந்தை யுடன் நீண்ட போராட்டத்தை நடத்தி வருகிறார் நந்தினி. மேலும் சமூகப் பிரச்சினைகளை முன்னி றுத்தியும் அவ்வப்போது போராட் டம் நடத்துகிறார். கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற இவரை அம்மாநிலப் போலிசார் கைது செய்தனர். பின் னர் விடுவிக்கப்பட்ட நந்தினி தமி ழகம் திரும்பிய பிறகு பாஜகவினர் அவருக்குத் தொடர் மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இதைக் கண்டிக்கும் வகையில் தமிழக பாஜக தலைமை அலுவல கமான கமலாலயத்தின் முன் போராட்டம் நடத்தப்போவதாக நந்தினி முன்பே அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிசைக்கு எதி ராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைதான விவ ரம் இவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து செய்தியாளர்­களிடம் பேசிய நந்தினி இனி தாமும் “பாசிச பாஜக ஆட்சி ஒழிக,” எனும் முழக்கத்தை முன்­வைக்கப் போவதாகத் தெரிவித்­தார். “சோபியா விமானத்தில் முழக்கமிட்டார் எனில், நான் பாஜக அலுவலகத்திலேயே அதைச் செய்யப்போகிறேன்,” என்றார் நந்தினி. இதையடுத்து வெள்ளிக் கிழமை பாஜக அலுவலகம் நோக்கித் தமது தந்தை மற்றும் சகோதரியுடன் சென்றார். அவரைப் போலிசார் பாதி வழியில் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.