கோலாலம்பூர்: கோலாலம்பூரில் பல இடங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளிவந்தபோதிலும் மக்கள் தங்களின் வழக்கமான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்படி போலிசார் ஆலோசனை கூறியுள்ளனர். பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கோலாலம்பூர் மாநகரம் பாதுகாப்பான இடம்தான் என்று கோலாலம்பூர் தலைமை போலிஸ் ஆணையாளர் தாஜுடின் முகம்மது இசா தெரிவித்தார்.
கோலாலம்பூரில் 7 இடங்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் படக்கூடிய அபாயம் மிகுந்த பகுதிகள் என்றும் அந்த இடங்களின் பெயர்களையும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் துங்கு அட்னான் துங்கு மன்சோர் வெளியிட்டிருந்தது குறித்து கருத்துரைத்தபோது போலிஸ் ஆணையாளர் தாஜுடின் இவ்வாறு கூறினார். "இந்தத் தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது என்று எங்களுக்குத் தெரியாது. எனினும் எங்களைப் பொறுத்த வரை, பொது இடங்களில் பாது காப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கண் காணிக்கப்படுகின்றன," என்று தாஜுடின் கூறினார்.