பிரசாந்த், ஆஸ்திரேலிய அழகி அமென்டா நடிக்கும் 'சாகசம்' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து இந்தியில் அக் ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் மறுபதிப்பில் நடிக்கிறார் பிரசாந்த். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் உருவாகிறது. தமிழிலும் இப்படத்திற்கு 'இருபத்தி யாறு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் பிரசாந்துடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமையா, அபி சரவணன், 'ரோபோ' சங்கர், ஜெய் ஆனந்த், தேவதர்ஷினி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி உள்ளதாம். முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் அவருக்கான தேர்வு நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இவர்களுடன் கௌரவ வேடத்தில் தேவயானி, சிம்ரன் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கோல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் பிரசாந்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார் இந்தியில் பிரபல கதாநாயகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ். இப்படத்தின் திரைக் கதை, வசனம் எழுதி, இயக்கி மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன். படப் பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சில முக்கிய காட்சிகளை மலேசியாவில் படமாக்க இருப்பதாகத் தகவல்.