சேலம்: போலிசின் தொப்பையைக் குறைக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் எட்டு போட தளம் அமைத்து, அதை அனைவரும் பயன்படுத்த எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக போலிசில் உயர் அதிகாரிகள் முதல் போலிசார் வரை பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரில் 42 விழுக்காட்டினர் தொப்பை கொண்டோராகவும் 18 விழுக்காட்டினர் நோயாளிகளாகவும் உள்ளனர். போலிஸ் என்றாலே மிடுக்கான உடை, கம்பீரமான தோற்றம் என்னும் நிலை மாறிவிட்டது.
இந்நிலையில், சேலம் எஸ்.பி. சுப்புலெட்சுமி தன் அலுவலகத்தில் மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் போலிசார் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில், எட்டு போடும் தளத்தை ஏற்படுத்தி அதை அனைவரும் பயன்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எஸ்.பி.யின் இந்த உத்தரவு தொப்பை போலிசாருக்கு மட்டுமின்றி, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்புள்ள போலிசார் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில் 'எட்டு போட்டால் கெட்டி ஆயுள்' என்பது முதுமொழியாக உள்ளது. சேலம் எஸ்.பி. அலுவலகத்தின் ஒரு பகுதியில் வளர்ந்துள்ள மரங்களுக்கு இடையே எட்டு போடும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.