சிங்கப்பூர் சட்ட அமைப்பில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிபர் உரை தொடர்பான சட்ட அமைச்சின் பிற்சேர்க்கையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தமது அமைச்சின் முக்கிய இலக்குகளில் சிலவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில், குற்றவியல் சட்டங்களில் கணிசமான சீரமைப்புகளை மேற்கொள்வது பற்றி தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாகத் திரு சண்முகம் கூறினார். "சிவில் நீதி அமைப்பை, சிவில் தீர்ப்புகள் அமலாக்கத்தை மேம்படுத்துவதும் முடியும்பட்சத்தில் சிவில் நீதி அமைப்பில் உள்ள சிக்கல்களைக் களைவதும் எங்கள் இலக்கு," என்றார் அமைச்சர்.
இந்த அறிவிப்புகளை வரவேற்ற சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம், அவற்றில் சில சட்டங்களில் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தது. சிங்கப்பூரின் குடும்பச் சட்டங்களை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. சமூகச் சட்டத்தில் அதிக கவனம் கொள்ளும்படியாக சிங்கப்பூரின் மூன்றாவது சட்டப் பள்ளி 'யூனிசிம்' பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படும். குற்றவியல், குடும்பச் சட்ட நிபுணர்கள் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் விதமாக இந்த மூன்றாவது சட்டப் பள்ளி அவ்விரு துறைகளில் பட்டதாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார். இறுதியாக, சிங்கப்பூரை சட்ட சேவைகளுக்கான அனைத்துலக மையமாக உருவாக்கவும் அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.