தீவிரவாதச் சிந்தனைகள், பயங்கரவாதம் ஆகிய மிரட்டல்களை எதிர்த்துப் போராடுவதில் சிங்கப் பூரர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு என டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். "தீவிரவாதம் நாம் நினைப்பதைவிட நமக்கு வெகு அருகில் இருக்கிறது. சிங்கப்பூர் எதிர் நோக்கும் ஐஎஸ் மிரட்டல் உண்மையானது; இப்பிரச்சினையை நாம் ஒன்றுகூடி, முழுமையாக, மூலத்திலிருந்து களையவேண்டும்," என்றார் தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சரான டாக்டர் மாலிக்கி.
தேசிய சவால்களை சிங்கப்பூர் எதிர்கொள்ள உதவும் முழுமைத் தற்காப்பின் ஐந்து தூண்களில் இரண்டான சமூக, மனோவியல் தற்காப்புகளைப் பலப்படுத்துவதில் அனைவரும் கடப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த மிரட்டல் சிங்கப்பூருக்குள் புகுந்துவிட்டதாகவும் அவர் குறிப் பிட்டார். சென்ற அக்டோபர் மாதம், பயங்கரவாதம் சார்ந்த நடவடிக்கை களில் ஈடுபட்டதற்காகப் பதின்ம வயதுள்ள இரு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். சென்ற 2014ம் ஆண்டிலிருந்து இரு சிங்கப்பூர் குடும்பங்கள் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.