சென்னை: அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா மீது நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை காவல்துறை மூவரைக் கைது செய்துள்ளது. கட்சித் தலைமைக்கும் அதிமுக அரசுக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த கருப்பையாவை, அதிமுகவில் இருந்து நீக்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து அவரது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. நேற்று முன்தினம் ராயப் பேட்டையில் உள்ள பழ.கருப்பையா வீட்டின் முன் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் சன்னல்கள் உடைந்து நொறுங்கின. மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியும் உடைந்தது.
"இச்சமயம் எனது மகன் வீட்டின் வாசல் பகுதியில் நின்றிருந்தார். சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் கதவைத் தாழிட்டார். மேலும் வீட்டின் விளக்குகளையும் அணைத்தார். அதனால் அவருக்கு காயமேற்படவில்லை," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பழ.கருப்பையா. இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர். முதற்கட்டமாக சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா