பெர்த்: ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள யார்லூப் நகரில் மூன்றில் ஒரு பகுதியை காட்டுத் தீ அழித்துள்ளது. பெர்த் நகருக்கு தெற்கே உள்ள யார்லூப் நகரம் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 500 முதல் 600 வரைதான் இருக்கும். அங்கு கிட்டத்தட்ட 250 வீடுகள் உள்ளன. இதில் 95 வீடுகள் தீக்கு இரையாகி விட்டன. நேற்று முன்தினம் இரவு பிடித்து எரியத் தொடங்கிய தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்து 24 மணி நேரங்களில் இரட்டிப்பாகி 53,000 ஹெக்டேர் நிலப்பரப்புக்குப் பரவியது.
அந்நகரத்தில் உள்ள 'தீ மற்றும் அவசர சேவை மைய'த்தின் ஆணையர் வெய்னி கிரெக்சன், "தீ சம்பவம் இந்த நகருக்கு மிகப் பெரிய பேரிழப்பைத் தந்துள்ளது," என செய்தியாளர்களிடம் கூறினார். "நாங்கள் எண்ணற்ற அரிய கட்டடங்களை இழந்துள்ளோம். அவற்றுள் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்கள். "அதிர்ஷ்டவசமாக மக்களில் மூன்று, நான்கு பேர் சிறு காயங்களுடன் தீயிலிருந்து தப்பினர். மூவரைக் காணவில்லை," என்றார். வீடுகளையும் வாகனங்களையும் கரிக்கட்டைகளாகவும் எலும்புக் கூடுகளாகவும் உருக்குலையச் செய்துள்ளது இந்த கொடூரத் தீ என அந் நகர மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.