அபுஜா: கடந்த ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் கபோன் நாட்டின் பியர் எமெரிக் ஒபாமெயாங். மத்திய ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த மதிப்பு மிக்க விருதை வென்றிருப்பது இதுவே முதன்முறை.
ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவிற்காக விளையாடி வரும் 26 வயதான ஒபாமெயாங்கிற்கு 143 வாக்குகள் கிட்டின. நான்கு முறை இந்த விருதைக் கைப்பற்றிய பெருமைக் குரியவரான ஐவரி கோஸ்ட் நாட்டவரும் மான்செஸ்டர் சிட்டி குழு ஆட்டக்காரருமான யாயா டூரேவிற்கு 136 வாக்குகள் கிடைத்தன.
சென்ற ஆண்டில் மட்டும் ஜெர்மனியின் முதல்நிலை லீக் கான 'புண்டஸ்லீகா'வில் 29 கோல்களையும் யூரோப்பா லீக்கில் ஏழு கோல்களையும் அடித்து அசத்தினார் ஒபாமெயாங்.