மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்பான 1MDB தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணை காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் தமது வங்கிக் கணக்கிலிருந்து ஏறத்தாழ 10 மில்லியன் வெள்ளியை விடுவிக்கும்படி தாம் செய்திருந்த விண்ணப்பத்தை வங்கியாளர் யாக் இயூ சீ திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார். 1MDBயுடன் தொடர்புடைய நிதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரில் பதிவாகியுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
சுவிஸ் வங்கி பிஎஸ்ஐயின் சிங்கப்பூர் பிரிவைச் சேர்ந்த மூத்த தனியார் வங்கியாளரான திரு யாக், நேற்றைய வழக்கு விசாரணைக்கு வரவில்லை. ஆனால் அவர் இன்னும் சிங்கப்பூரில்தான் இருக்கிறார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது. வரி, சட்டச் சேவைகள் தொடர்பான கட்டணங்களைச் செலுத்துவதற்காகவும் அடிப்படைச் செலவுகளுக்காகவும் நிதியை விடுவிக்க திரு யாக் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் திரு யாக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் அவருக்குத் தேவையான பணம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். தமது செலவுகளுக்காகத் திரு யாக் வெளிநாட்டு வங்கிக் கணக்கிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரும் ஏறத்தாழ 1.7 மில்லியன் வெள்ளி பறிமுதல் செய்யப்படாது என்று உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்று திரு யாக்கின் வழக்கறிஞர் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டார்.