பொது வாடகைக் குடியிருப்புகளில் வசித்த 500க்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு முதல்முறையாக வீடு வாங்கியதாக வீடமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 12,411 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அதற்குப் பிறகு வீடு வாங்கிய அத்தகையோரின் எண்ணிக்கை பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. 2014ஆம் ஆண்டில் 750 பேர் இந்தப் பிரிவில் வீடு வாங்கி இருந்தனர். 2011ஆம் ஆண்டு முதல் 3,000க்கும் அதிகமானோர் விருப்பத்திற்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகள் அல்லது எஞ்சியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனை ஆகியவற்றின் கீழ் வீடுகளை வாங்கினர். ஓராண்டுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 2,500 ஆக இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 600 குடும்பத்தார் இந்தப் பிரிவில் வீடு வாங்குவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
பொது வாடகைத் திட்டத்தின் கீழ், $1,500 வரை மாத வருமானம் உள்ள குடும்பங்கள் மிகவும் குறைவான வாடகையில் வீடுகளைப் பெறுகின்றன. ஓரறை வீடுகளுக்கான வாடகை $26; ஈரறை வீடுகளுக்கு $44. ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வுக்குப் பிறகு வாடகை புதுப்பிக்கப்படும். "நிலையான வருமானம் பெறும் குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க ஊக்குவிக்கப் படுவர்," என கழகம் கூறிற்று.