சிங்கப்பூரின் ஏர்போர்ட் ரோட்டில் உள்ள போக்குவரத்துக் காவல்துறை வாகனக் காப்பகத்தில் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
அந்த வாகனங்களில் இரண்டு மட்டும் 2015ஆம் ஆண்டு முதல் அங்கு உள்ளதாகவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எழுப்பிய கேள்விக்கான பதிலில் காவல்துறை கூறியது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு காவல்துறையிடம் விவரங்களைப் பெற்றது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
குற்றச்செயல்களில் தொடர்புடையதாக நம்பப்படும் வாகனங்களைச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் அல்லது தண்டனைச் சட்டத்தின்கீழ் காவல்துறை பறிமுதல் செய்ய முடியும்.
விசாரணை முடிந்து வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்ட பிறகும் வாகன உரிமையாளர் தனது வாகனத்தைக் கேட்டு வரவில்லை எனில் வாகனக் காப்பகத்தில் அவை நிறுத்தி வைக்கப்படும் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.

