அரசாங்க அதிகாரிகளுக்குக் காயம் ஏற்படும் வகையில் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட மின்சிகரெட் விற்பனையாளர் ஒருவர் மீது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவற்றில் பெரும்பாலானவை மின்சிகரெட் தொடர்பானவை.
ஜோடன் சின் வெய் லியங் எனப்படும் அந்த 28 வயது சிங்கப்பூரரை, மின்சிகரெட் தொடர்பான குற்றச்செயல் தொடர்பாகக் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி மாலை 4 மணியளவில் பீஷான் ஸ்திரீட் 13ல் உள்ள புளோக் 189 அருகே சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
அப்போது காரில் இருந்த அந்த ஆடவர், அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் காரை வேகமாகச் செலுத்தினார். அப்போது, காருக்கு நெருக்கமாக இருந்த இரு அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் குதித்தனர்.
அந்தச் சம்பவம் தொடர்பிலும் அந்த ஆடவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், பல்வேறு வகையான மின்சிகரெட்டுகளை ஜூலை மாதம் விற்க முயன்றதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த ஆடவர் மீதான வழக்கில், வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் டிசம்பர் 23ஆம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தாம் கைதுசெய்யப்பட்ட இரு நாள்களுக்குப் பிறகு, அதாவது கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று புதிய சிங்கப்பூர்க் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க முயலும் நோக்கில் பொய்யுரைத்ததாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொய்யென்று அறிந்திருந்தும் தம் கடப்பிதழ் தொலைந்துபோய்விட்டதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

