சிங்கப்பூரில் அமைந்திருக்கும் மேம்பட்ட ஆய்வு, கல்விக்கான கேம்பிரிட்ஜ் நிலையம் (Cares), இங்குள்ள வேதித் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் எரிசக்திக் கட்டமைப்புகளும் படிம எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது தொடர்பான இரண்டு ஆய்வுத் திட்டங்களை வழிநடத்துகிறது.
$31 மில்லியன் மதிப்பிலான இத்திட்டங்கள், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டதாக நிலையம் டிசம்பர் 5ஆம் தேதி தெரிவித்தது.
சிங்கப்பூரின் எரிசக்தி, தொழில்துறைகளில் கரிம நீக்கத்திற்கு உதவும் வகையில் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட $90 மில்லியன் திட்டத்தின்கீழான ஒன்பது திட்டங்களில் இவ்விரண்டும் அடங்கும்.
‘கேம்பிரிட்ஜ் கேர்ஸ்’, பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அந்நாட்டுக்கு வெளியே அமைத்த முதல் ஆய்வு நிலையமாகும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து 2013ஆம் ஆண்டில் அது அமைக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கம் அதற்கு நிதி வழங்கியது.
நிலையத்தின் புதிய திட்டங்களில் முதலாம் திட்டத்தின்கீழ், ஹைட்ரஜன், அம்மோனியா ஆகிய வாயுக்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, விமானப் போக்குவரத்து, கடல்துறைத் தொழிற்சாலைகளில் அதைப் பயன்படுத்துவது, மாசு வெளியேற்றத்தைக் குறைப்பது ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஹைட்ரஜன், அம்மோனியா இரண்டையும் எரிக்கும் செயல்முறை, அதில் வெளியாகும் வாயுக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய, லேசர் ஆய்வுக் கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் திட்டத்தின்கீழ், படிமம்-சாராத மூலப்பொருள்களை வேதியியல் துறைக்கான பொருள்களாக மாற்ற உதவும் வழிமுறைகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
துணைப் பிரதமரும் தேசிய ஆய்வுக் கழகத்தின் தலைவருமான ஹெங் சுவீ கியட், டிசம்பர் 4ஆம் தேதி அந்த நிலையத்தைப் பார்வையிட்டார்.
நிலைய ஆய்வாளர்களின் பணி, 2050க்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்கும் கரிம நீக்கத்துக்கும் இடையிலான சமநிலையை (Net Zero) எட்டுதல், சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 ஆகியவற்றுக்கான இலக்குகளுக்கு அணுக்கமாக இருப்பதாக அவர் கூறினார்.
இரு ஆய்வுத் திட்டங்களும் நிறைவடைய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் பிடிக்கும் எனக் கூறப்பட்டது.

