தானா மேரா கோஸ்ட் சாலையில் உள்ள வெளிநாட்டு ஊழியர் விடுதியில் தங்கியிருந்தோருக்கு இடையே மூண்ட சண்டை தொடர்பில் 24 முதல் 54 வயதிற்குட்பட்ட ஒன்பது பேரிடம் காவல்துறை விசாரித்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையே சண்டை மூண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை அவ்விடுதிக்குச் சென்றபோது, சண்டை ஏற்கெனவே முடிவிற்கு வந்துவிட்டது.
விசாரணை மூலமும் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளி மூலமும் சண்டையில் ஈடுபட்டோரைக் காவல்துறை அடையாளம் கண்டது.
சண்டை தொடர்பான காணொளிகள் இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. வெளிநாட்டு ஊழியர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது காணொளியில் தெரிகிறது.
அதனைக் கண்டதும், சக விடுதியினர் பலரும் விடுதிப் பணியாளர்களும் சண்டையில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டு, சமாதானப்படுத்த முயன்றனர்.
கூடுதல் தகவலுக்காக மனிதவள அமைச்சை நாடியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

