அரசியல் நன்கொடை சான்றிதழ் பெற 226 பேர் விண்ணப்பம்

சிங்கப்பூரில் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு 226 பேர் அரசியல் நன்கொடை சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை இன்று (ஜூன் 27) தெரிவித்தது.

சிங்கப்பூரில் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தாங்கள் பெற்ற அரசியல் நன்கொடைகளைக் குறிப்பிட்டு, அவை சட்டத்திற்குட்பட்டவை என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற விதிமுறை உண்டு.
 
அந்த எழுத்துபூர்வத் தகவல்கள் அரசியல் நன்கொடை சான்றிதழ்களைப் பெற அவசியம். வேட்பு மனு தாக்கலுக்கு முந்தைய நாளுக்குள், அரசியல் நன்கொடைகளுக்கான பதிவாளர் அந்தச் சான்றிதழ்களை வழங்குவார்.

வேட்பு மனு தாக்கல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வேட்பு மனுவுடன் இந்த சான்றிதழையும் வேட்பாளர்கள் இணைக்க வேண்டும். 

வேட்பாளரை முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகியோருடன் ஆதரவு தெரிவிக்கும் நால்வரும் (குறைந்தபட்சம்) வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளருடன் செல்ல வேண்டும். இவர்கள் அனைவரும் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அரசியல் நன்கொடை சான்றிதழ் பெற 37 மலாய் இனத்தவரும் 35 இந்திய மற்றும் சிறுபான்மை இனத்தவரும் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் துறை தெரிவித்தது. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க நேற்றுதான் இறுதி நாள்.

ஒவ்வொரு குழுத்தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவராவது மலாய் இனத்தவராகவோ அல்லது இந்திய மற்றும் சிறுபான்மை இனத்தவராகவோ இருக்க வேண்டும். குழுத்தொகுதியின் தேவைக்கேற்ப அது முடிவு செய்யப்படலாம்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online