சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி இன்று (ஜூன் 29) அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘இன்னும் சிறந்தவற்றுக்கு நீங்கள் தகுதியுடையவர்’ எனும் தேர்தல் பிரசார முழக்கவரியையும் அது வெளியிட்டுள்ளது.

மொத்தம் 13 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையில் பொருளியல், சமுதாயம், அரசியல் ஆகிய மூன்று பரந்த அம்சங்களில் தனது தொலைநோக்குப் பார்வையைக் கட்சி பட்டியலிட்டுள்ளது.

பொருளியலைப் பொறுத்தவரையில், கொவிட்-19 நெருக்கடியிலிருந்து “மீண்டெழும் உத்தியை” தான் கையாளவிருப்பதாக அக்கட்சி கூறியது. சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வலுவான ஆதரவை வழங்கவிருப்பதாக அது சொன்னது.

இன்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் துணைத் தலைவர் ஹேஸல் புவா, கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் அணியில் இடம்பெறும் அவர், வெளிநாட்டு ஊழியர்களின் வருகையால் சமூக ஒருங்கிணைப்புப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், பொதுப் போக்குவரத்திலும் பொது இடங்களிலும் கூட்ட நெரிசல் காணப்படுவதாகச் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல், பொருள், சேவைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளதாக  திருமதி புவா வாதிட்டார். இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் இப்பிரச்சினையைச் சமாளிக்க சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நோக்கம் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

“தடையற்ற வர்த்தக உடன்பாடுகளை நாங்கள் மறுஆய்வு செய்வோம்,” என்றார் திருமதி புவா.

சமுதாயம் என வரும்போது, சிங்கப்பூரர்கள் நெருக்கடி காலகட்டத்தைக் கடக்க உதவ சமுதாயப் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி முற்படுகிறது. எடுத்துக்காட்டாக, வேலையில்லாதவர்களுக்கு நிதியுதவியை மேம்படுத்துவது,

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி, கட்டண உயர்வை நிறுத்தி வைப்பது, அத்தியாவசிய பொருட்களுக்கு பொருள், சேவை வரியிலிருந்து விலக்கு அளிப்பது போன்றவற்றைக் கட்சி சுட்டியது.

அரசியலைப் பொறுத்தவரையில், அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படும் என அக்கட்சி கூறியது. இணையம்வழி பொய்யுரை, சூழ்ச்சித்திறத்திற்கு எதிரான பாதுகாப்புச் சட்டத்தை (பொஃப்மா) மறுஆய்வு செய்யவிருப்பதாகவும் அக்கட்சி கூறியது.

இந்நிலையில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துரைத்த அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக், பல மாதங்களாக பொதுமக்களுடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனையின் முடிவில் இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“சிங்கப்பூரர்களின் முக்கிய கவலைகளை நாங்கள் கேட்டறிந்தோம். வாழ்க்கைச் செலவினமே அவற்றில் முதன்மை வகிக்கிறது,” என்றார் அவர்.