பிரதமர் லீ: தேர்தலுக்கும் குடும்ப சச்சரவுகளுக்கும் தொடர்பில்லை

வரும் பொதுத் தேர்தலுக்கும் குடும்ப சச்சரவுகளுக்கும் தொடர்பில்லை. மாறாக, சிங்கப்பூர் அதன் வரலாற்றிலேயே மோசமான தருணத்தில் எதிர்கொள்ளும் முக்கியமான தேர்தல் இது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சகோதரர் திரு லீ சியன் யாங் எதிர்த்தரப்பு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் சேர்ந்திருப்பது குறித்து நேற்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு லீ, “ஒரு சிங்கப்பூர் குடிமகன் என்ற முறையில் திரு லீ சியன் யாங் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம். அது அவரது உரிமை,” என்றார்.

“ஆனால் இந்தப் பொதுத் தேர்தல் என்னைப் பற்றியதோ அல்லது எனக்கும் எனது சகோதரருக்கும் இடையிலான குடும்ப சச்சரவு பற்றியதோ அல்ல.

“மாறாக, அது நமது வரலாற்றில் மிக மோசமான தருணத்தில் சிங்கப்பூரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய பொதுத் தேர்தல் பற்றியது,” என்றும் பிரதமர் லீ எடுத்துரைத்தார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினராக 62 வயது திரு லீ சியன் யாங் கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டார். மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் டான் செங் போக் கடந்த ஆண்டு தோற்றிவித்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முக்கிய உறுப்பினராக திரு லீ சியன் யாங் உருவெடுக்கக்கூடும் என்று பரவலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஜூலை 10ஆம் தேதி பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக திரு லீ சியன் யாங் இதுவரை முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவர் தனது கட்சி வேட்பாளர்களுடனும் உறுப்பினர்களுடனும் தொகுதி உலாக்களில் பங்கேற்று வருவதுடன் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக எதிர்த்தரப்புக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.

தாம் தலைமை தாங்கும் அங் மோ கியோ குழுத் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய 68 வயது பிரதமர் லீ, 1965ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூர் தற்போது மிக மோசமான நெருக்கடியைச் சந்திந்துக்கொண்டிருக்கிறது என்றார்.

“நம் முன் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் நாம் நம் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார் பிரதமர்.

திரு லீ சியன் யாங், அவரது சகோதரி டாக்டர் லீ வெய் லிங்இருவரும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரதமர் லீ சியன் லூங்குடன் கடந்த சில ஆண்டுகளாகவே எண் 38 ஆக்ஸ்லி ரோட்டில் உள்ள தங்கள் தந்தை அமரர் லீ குவான் இயூவின் வீட்டின் உரிமை தொடர்பில் வெளிப் படையாக மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று வேட்புமனு தாக்கல்

சிங்கப்பூரின் 14வது நாடாளு மன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முற்பகல் 11 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையில் இடம்பெறும். 17 குழுத் தொகுதிகளிலும் 14 தனித் தொகுதிகளிலும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதன் முழு விவரம் தெரிந்துவிடும்.