ஜாலான் புசார் மசெக அணிக்கு ஜோசஃபின் டியோ தலைமை

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, ஜாலான் புசார் குழுத்தொகுதியில் களம் இறங்கும் மக்கள் செயல் கட்சி அணிக்குத் தலைமை ஏற்கிறார்.

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள திருவாட்டி டியோ, நேற்று பியோ கிரசெண்ட் சந்தை மற்றும் உணவு நிலையத்துக்குத் தொகுதி உலா சென்றார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெனிஸ் புவா, ஹெங் சீ ஹாவ் ஆகியோரும் புதிய வேட்பாளரான வான் ரிசால் வான் ஸக்காரியாவும் உலாவில் கலந்துகொண்டனர்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி மசெக உறுப்பினர்களாக இவர்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர்.

ஐந்து தவணை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள லில்லி நியோ, 66, அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பதிலாக திருவாட்டி டியோ போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் மசெகவை எதிர்த்து மக்கள் குரல் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.