ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்களுக்கு துணைப் பிரதமர் ஹெங் தலைமை

ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவை முன்னிட்டு இன்று காலை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

சில கட்சிகள் தொகுதிகளின் வேட்பாளர்களை கடைசி நேரத்தில், வேட்பு மனுத் தாக்கல் நிலையங்களில் மாற்றின.

ஈஸ்ட் கோஸ்ட், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி (மசெக) வலுவான குழுக்களை அமைக்கும் நோக்கில் நான்காம் தலைமுறைத் தலைவர்களை நிறுத்தியுள்ளது. அங்கு போட்டி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஏற்பாடு.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கடந்த தேர்தலில் தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் அவர் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

மக்கள் செயல் கட்சியின் சார்பில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் முன்பு போட்டியிட்ட, நீடித்த அனுபவம் மிக்க, திரு லிம் சுவீ சே அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வலு சேர்க்கும் நோக்கில் திரு ஹெங் அங்கு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

பாட்டாளிக் கட்சியின் சார்பில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் திரு கென்னத் ஃபூ, 42, திரு அப்துல் ஷரிஃப் அபூ காசிம், 54, திரு டெரென்ஸ் டான், 48, திரு டய்லான் இங், 44, திரு நிக்கோல் சியா, 33 ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த மூன்று தேர்தல்களில் இந்த குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி போட்டியிடுகிறது. அங்கு பொதுவாக பலத்த போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது.

திரு ஹெங்குக்கு பதிலாக தெம்பனிஸ் குழுத்தொகுதியில் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், 48 போட்டியிடுகிறார். அவர் கடந்த தேர்தலில் அங் மோ கியோ குழுத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.