புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பால் தம்பையா

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் பால் தம்பையா, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் வேட்பாளராகியுள்ளார். 

அந்தத் தொகுதியில் திரு லியங் கெங் வா, 56, மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இதற்கு முந்தைய தேர்தலில் ஹால்ந்து - புக்கிட் திமா குழுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அவர்.

புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வந்த டாக்டர் டியோ ஹோ பின், 60, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதையடுத்து திரு லியங் அங்கு போட்டியிடுகிறார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பால் தம்பையா, ஹாலந்து-புக்கிட் திமா குழுத்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கட்சியினரின் முடிவை ஏற்று அவர் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட திரு குங் வாய் யீன், இந்த முறையும் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிடுகிறார்.