எதிர்க்கட்சியினருக்கு உரிய இடம்

பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் சரி, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட அளவில் எதிர்க்கட்சியினர் இருப்பதற்கு உத்தரவாதம் உண்டு என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் செயல் கட்சி வென்றாலும்கூட, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் இருப்பதற்கு விரிவுபடுத்தப்பட்ட தொகுதியில்லா எம்.பி. திட்டம் உத்தரவாதம் அளிக்கிறது என்று நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் லீ குறிப்பிட்டார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே, தொகுதி இல்லா எம்.பி.க்களுக்கும் முழுமையான வாக்களிப்பு உரிமைகள் உண்டு. வரவுசெலவுத் திட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானம் என எல்லாவற்றிலும் அவர்கள் வாக்களிக்க முடியும்,” என்று திரு லீ சொன்னார்.

ஆயினும், சிங்கப்பூரர்கள் ‘முழு தகுதி இல்லாத வேட்பாளர்களுக்கு’ வாக்களித்துவிடக் கூடாது என்றும் அது தேசிய அணியைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

வேட்பாளர்களையும் கட்சிகளையும் தீர ஆராய்ந்து, எந்த வேட்பாளர் அல்லது வேட்பாளர் குழுவினர் தங்கள் தொகுதியில் தங்களுக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றுவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தக் கட்சி சிங்கப்பூருக்குச் சிறப்பாகச் சேவையாற்றும் என்பனவற்றை எல்லாம் சிந்தித்து வாக்காளர்கள் வாக்குச் செலுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இருந்தாலும்கூட, எல்லாத் தொகுதிகளிலும் நல்ல வாக்கு விழுக்காட்டைப் பெற்று, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்பதைக் காட்டிலும் தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாகப் போராடும் என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.

“ஆனாலும், நாடாளுமன்றத்தை, நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கும் தொகுதியில்லா எம்.பி.க்களுக்கும் உரிமைகளிலும் சிறப்புரிமைகளிலும் எந்த வேறுபாடும் இராது,” என்றும் திரு லீ தெளிவுபடுத்தினார்.

“அவர்கள் அனைவரும் ஒன்றுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களைப் போலவே தொகுதியில்லா எம்.பிக்களும் துடிப்புடன் பணியாற்றுவர் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் அவர்.

குறிப்பாக, சில நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களையும் விஞ்சிவிடும் அபாயம் இருந்தாலும், பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த தொகுதி இல்லா எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் துடிப்புடன் பங்கேற்று வருவதாக பிரதமர் சுட்டினார்.

இந்தப் பொதுத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிட்ட திரு லீ, கொவிட்-19 கிருமித்தொற்று நெருக்கடியைச் சமாளித்து, முன்னேறிச் செல்ல நாட்டிற்கு சிறந்ததொரு குழு தேவை என்றும் குறிப்பிட்டார்.

‘நம் வாழ்க்கை, நம் வேலைகள், நம் எதிர்காலம்’ என்ற மக்கள் செயல் கட்சியின் தேர்தல் முழக்கவரியை மீண்டும் வலியுறுத்திக் கூறிய பிரதமர், ‘அனுபவமிக்க, கடப்பாடு கொண்ட’ கட்சிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கொரோனா நோய்ப் பரவல் காரணமாக மக்கள் அனுபவித்து வரும் வேதனை, நிச்சயமற்ற சூழல் காரணமாக தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று மசெக எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

கடும் போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் தங்களுக்கு வியப்பளிக்கவில்லை என்றும் பிரதமர் லீ சொன்னார்.

“கடந்த சில மாதங்களாவே எதிர்க்கட்சிகள் துடிப்புடன் இயங்கி வருகின்றன. எந்தத் தொகுதிகளில் அவை மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன, எங்கெல்லாம் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் கண்டு வருகிறோம்.

“எந்தத் தொகுதிகளில் எங்களுக்கு மிக முக்கியமான போட்டி இருக்கும் என்பதையும் அதற்கேற்றபடி சிறப்பாகக் காய் நகர்த்துவது எப்படி என்பதையும் மதிப்பிட முயன்று வருகிறோம். ஆதலால், ஒவ்வொரு தொகுதியிலும், அந்தத் தொகுதியின் தேவைகளுக்கு மிகப் பொருத்தமான குழுவைக் கொண்டுள்ளோம். குடியிருப்பாளர்களுக்கு எங்களால் மிகச் சிறப்பாகச் சேவை ஆற்ற முடியும்,” என்று திரு லீ தெரிவித்தார்.

“எதிர்க்கட்சியினர் நன்றாகத் திட்டமிட்டு, ஆயத்தமாகி வருகின்றனர். அவர்கள் எளிதாக விட்டுவிட மாட்டார்கள். ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொருவரின் மனத்தை வெல்லவும் மசெக போராடும்,” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!