திட்டங்கள், நிலைப்பாடுகளை முன்வைத்த கட்சிகள்

பொதுத் தேர்தலுக்கான முதல் தொகுதி அரசியல் ஒளிபரப்பு நேற்றிரவு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதில் அல்ஜுனிட் குழுத் தொகுதி, அங் மோ கியோ குழுத் தொகுதி, பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி, புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி, புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதி ஆகியவற்றில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்கள் திட்டங்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்தனர்.

அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களான திரு பிரித்தம் சிங், திருவாட்டி சில்வியா லிம், திரு ஃபைஷால் மனாப், திரு ஜெரால்ட் கியாம், திரு லியோன் பெரேரா ஆகியோர் நேற்று பேசினர். மக்கள் செயல் கட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் அணுக்கமாகக் கண்காணிக்கவும் தனது செயல்பாடுகள் குறித்து சிங்கப்பூரர்களிடம் மக்கள் செயல் கட்சி வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யவும் தங்களுக்கு வாக்களிக்குமாறு பாட்டாளிக் கட்சி வாக்காளர்களைக்

கேட்டுக்கொண்டது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக திரு பிரித்தம் சிங் கூறினார்.

கெப்பல் கார்ப் மோசடி போன்ற விவகாரங்கள் குறித்து அரசாங்கத்திடம் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டதை அவர் சுட்டினார்.

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் தங்கள் கட்சியை மீறி தொகுதி வாசிகளுக்கு எதையும் செய்ய முடியாது என்றார் திரு பிரித்தம் சிங்.

மேலும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் நிதிநிலை சிறப்பாக இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார். அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தில் $7.9 மில்லியன் உபரி இருப்பதாக ஆக அண்மைய கணக்கு தணிக்கை காட்டுவதாக அவர் கூறினார்.

2011ஆம் ஆண்டில் மக்கள் செயல் கட்சியிடமிருந்து அல்ஜுனிட் குழுத் தொகுதியை வென்றபோது அந்த நகர மன்றத்தில் இருந்த உபரித் தொகையைவிட தற்போது இரு மடங்கு அதிகம் இருப்பதாக அவர் கூறினார்.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் கணக்குவழக்கு சரியாக இருப்பதாக கடந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதை திரு பிரித்தம் சிங் சுட்டினார். அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சு மதிப்பீடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

புக்கிட் பாத்தோக் தனித்தொகு தியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் முழு நேர நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படுவது உறுதி என்று நேற்றைய தொகுதி அரசியல் ஒளிபரப்பின்போது தெரிவித்தார். ஆனால் மக்கள் செயல் கட்சியின் முரளி பிள்ளை பகுதி நேர நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் செயல்படுவேன் என்று கூறுவதை அவர் சுட்டினார்.

பகுதி நேர நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படுபவர்கள் தங்கள் தொகுதியைப் பார்த்துக்கொள்வது மட்டுமின்றி தங்கள் வேலையையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் சீ.

இதனால் அவர்கள் தொகுதிப் பணிகளிலும் குடியிருப்பாளர்களின் நலனிலும் முழு கவனம் செலுத்துவது முடியாத காரியம் என்றார் அவர்.

பகுதி நேர நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயல்படும் மக்கள் செயல் கட்சியினர் தங்கள் பணிகளைச் செய்ய நிர்வாக முகவர்களை நியமிப்பதாக டாக்டர் சீ தெரிவித்தார். இதனால் குடியிருப்பாளர்களின் செலவினம் கூடுவதாக அவர் கூறினார்.

தமது நிர்வாகத்தின்கீழ் தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைச் செய்ய தகுதி பெற்ற, அனுபவம்வாய்ந்த நிபுணர்கள் மட்டும் நியமிக்கப்படுவர் என்று டாக்டர் சீ உறுதி அளித்தார்.

நகர மன்றம் தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்த பிறகு, முதல் 100 நாட்களில் இடைக்கால நிதி அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றார் அவர். நகர மன்றம் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட முறை, தொகுதிக்கான வரவுசெலவுத் திட்டம், 12 மாதப் பணித் திட்டம் ஆகியவை புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் மக்கள் கட்சி வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் முழுநேர நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்படுவது உறுதி என்று தெரிவித்தனர்.

குடியிருப்பாளர்களின் தேவைகளை நேரில் சென்று பூர்த்தி செய்வோம் என்று அவர்கள் கூறினர்.