முதலாவது கட்சி அரசியல் ஒளிபரப்பில் வேலைவாய்ப்புகள், வீடமைப்பு, குடிநுழைவு, பொருள் சேவை வரி, மத்திய சேமநிதி என மக்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களாக விளங்கும் பிரச்சி னைகளில் ஏழு கட்சிகளும் கவனம் செலுத்தியிருந்தன.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஒளிபரப்பில், கொவிட்-19 தொற்றால் சிங்கப்பூர் மிக மோசமான பின்னடைவை அடையக்கூடும் என்பதால் கட்சிகள் இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்துவதாகக் கூறின. மக்கள் செயல் கட்சி, சீர்திருத்தக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் குரல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயக கட்சி, பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகியவை இதில் பங்கேற்றன.
இனிவரும் சவால்களைச் சமாளித்து சிங்கப்பூரை வழிநடத்து வதற்காக ஆளும் மசெகவுக்குச் சிறப்பான அறுதிப் பெரும்பான்மையை அளிக்குமாறு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அடுத்த சில ஆண்டுகளில் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் வேலைகளைத் தற்காப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று திரு ஹெங் தம் 13 நிமிட உரையில் குறிப்பிட்டார்.
சென்ற தேர்தலின்போது மசெக அளித்திருந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாக வும் அனைவரும் ஒன்றாக இயங்க ஒரே திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் வலுவான, திறமையான அரசாங்கம் அந்நிலையைச் சாதிக்க உதவும் என்றும் திரு ஹெங் சொன்னார்.
வெளிநாட்டவருக்கு வேலைவாய்ப்பு, கட்டுப்படியாகக்கூடிய வாழ்க்கைச் செலவினம் போன்ற விவகாரங்களுடன் நாட்டை நிர்வகிப்பதில் தங்களுக்கு சரிசம வாய்ப்பு கிடைப்பது குறித்தும் மற்ற கட்சிகள் பேசின. நாட்டு நிர்வாகத்தில் மசெக மட்டும் பங்கு பெறுவது போதாது என்று கூறிய சிமுகவின் தலைமைச் செயலாளர் டான் செங் போக், தம் கட்சியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் மக்களின் குரலாக செயல்படும் என்றார்.