அமைச்சர் சண்முகம்: இந்தியர்களுக்கான இடம் எப்போதும் பாதுகாக்கப்படும்

மக்கள் செயல் கட்சியின் அடிப்படை கொள்கை, நாடாளுமன்றத்தில் எல்லா இனத்தவர்களின் பிரதிநிதிப்பை உறுதிசெய்வது என்றும் நாடாளுமன்றத்தில் இந்தியர்களுக்கான இடம் எப்போதும் பாடுகாக்கப்படும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் திரு கா.சண்முகம் தெரிவித்தார்.

புதிய ம.செ.க வேட்பாளர் திரு டெரிக் கோவுடன் நீ சூன் தொகுதி உலாவில் நேற்று ஈடுபட்ட திரு சண்முகம்  அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

இம்முறை ம.செ.க புதிய இந்திய வேட்பாளர்களை அறிமுகம் செய்யாதது தொடர்பில் விளக்கம் தந்த அமைச்சர், பொது தேர்தலில் ஒவ்வொரு முறையும் கட்சி புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்போது, புதிய இந்திய வேட்பாளர்கள் உள்ளனரா என்ற ஆர்வம் சமூகத்தினரிடையே இருக்கவே செய்யும் என்பதை தாம் உணர்வதாகச் சொன்னார்.

அதே சமயத்தில் எத்தகை இந்தியர்கள் நாடாளுமன்றத்தில்  இடம்பெறுகின்றனர் என்பதை பார்க்க வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.

‘’முதலில், கட்சியில் இனம், மதம் பாராமல் தகுதிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக நாட்டு மக்களின் கட்டமைப்பை பொருத்து, நாடாளுமன்றத்தில் வெவ்வெறு இனத்தவர்களின் பிரதிபலிப்பும் அங்கு அடங்கியிருக்க வேண்டும்,” என சுட்டினார் அமைச்சர்.

நாடாளுமன்றத்தில் ஒவ்வோர் இனத்தவரின் பிரதிநிதிப்பு சதவிகிதத்தில் ஓரளவு ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம் ஆனால் அதில் பெரிய மாற்றங்கள் இருந்தால் சிலர் அதையும் பார்ப்பர் என்று திரு சண்முகம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் ம.செ.க சார்பில் 9 இந்தியர்கள் இடம்பெற்றனர் என்றும் நாட்டில் இந்தியர்களின் சதவிகிதத்தை காட்டிலும் இது கூடுதலாக உள்ளது என்றும் அவர் சுட்டினார்.

கடந்த சில ஆண்டுகளின் புதிய வேட்பாளர்களின் தேடலில் சில இந்தியர்களும் இடம்பெற்றதாகவும் ஆனால் தகுதி அடிப்படையில் அந்தந்த தொகுதிகளுக்கு அவர்களைவிட பொருத்தமான மற்ற வேட்பாளர்கள் இருந்ததால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் பிரதிநிதிப்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் குழுத்தொகுதி முறை உள்ளது என்றார் அமைச்சர்.

‘’ம.செ.க எவ்வகையில் இந்தியர்களைப் பாதுகாக்கும் குறித்து யவரும் கவலைப்படத் தேவையில்லை. புதிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் வர வேண்டும் என்பதே எங்களது கொள்கையும், பிரதமரும் அவ்வாறே ஆசைக்கொண்டுள்ளார்,” என்று தெரிவித்தார் திரு சண்முகம்.