சிஜக: மக்களை திசைதிருப்பும் செயல்

மக்கள் தொகையை பத்து மில்லியனாக்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசியதற்கு மக்கள் செயல் கட்சி, வெள்ளிக்கிழமை இரவு அளித்த பதிலை வைத்துப் பார்க்கும்போது அக்கட்சி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிப்பதைப் போல் உள்ளது என்று கூறியுள்ளார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா. இது வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்று என்றும் அவர் கூறினார்.

திரு தம்பையா மேலும் கூறுகையில், “உண்மையிலேயே செய்வதறியாது தவிக்கும் அறிகுறியாகவே இதை நான் கருதுகிறேன். அவர்களிடம் இதற்குமேல் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. எனவேதான் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒருவரைத் தாக்கி அழிக்கும் மசெகவின் பழைய உத்திகளை மீண்டும் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்,” என்றார்.

திரு தம்பையா, தான் போட்டியிடும் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் உணவங்காடிகள், ஈரச்சந்தைகள் போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியபோது செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். மசெகவினருக்கு 10 மில்லியன் மக்கள்தொகை குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் அவர்கள் ஏன் தேர்தல் வரும் வரை காத்திருந்து இப்போது அது தவறான செய்தி என்று சொல்ல வேண்டும் என மீண்டும் கேள்வி எழுப்பினார். இது தேர்தல் சார்ந்த முக்கியமானவை குறித்து மக்களைச் சிந்திக்க விடாமல் திசைதிருப்புவதாக உள்ளது என்று அவர் கூறினார். இது குறித்து தம்மை எதிர்த்துப்போட்டியிடும் மசெக வேட்பாளரான திரு லியங் எங் ஹுவா பதிலளிக்க மறுத்து வருவதாகவும் திரு தம்பையா கூறினார்.