மசெகவுக்கு ‘வெற்றுக் காசோலை’ கிடைத்ததுபோல் இருக்காது

நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) ‘வெற்றுக் காசோலை’ கிடைத்ததுபோல ஒரு நிலைமை அமையாது என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.

“சிங்கப்பூர் வாக்காளர்கள் பகுத்தறிவுமிக்கவர்களாகவும் கல்வி கற்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

“நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாம் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அடுத்த பொதுத் தேர்தலில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்,” என்று செம்பவாங் குழுத் தொகுதியில் போட்டியிடும் மசெக அணிக்குத் தலைமை வகிப்பவருமான திரு ஓங் நேற்றுக் காலை செய்தியாளர்களிடம் விவரித்தார்.

பாட்டாளிக் கட்சியின் வேட்பாளரான ஜேமஸ் லிம், சிங்கப்பூரர்கள் பாட்டாளிக் கட்சிக்கு வாக்கு அளித்து மசெகவுக்கு ‘வெற்றுக் காசோலை’ கிடைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற தேர்தல் விவாத நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

நாடாளுமன்றத்தில் மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்க மட்டார்கள் என்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள்தான் அரசாங்கத்தைக் கேள்வி கேட்பார்கள் என்றும் பாட்டாளிக் கட்சி கூறியதையும் திரு ஓங் நிராகரித்தார்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தில் 2016ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்குப் பிறகு, தொகுதியில்லா உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 12 எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பார்கள் என்றும் திரு ஓங் விளக்கினார்.

“சில கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புவார்கள் என்பது உண்மைதான். ஆனால், உற்று நோக்கினால் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் தொகுதியில்லா உறுப்பினர்களுக்கும் சரிசம உரிமை கொடுக்கப்பட்டிருக்கும்.

“ஒரே வித்தியாசம் என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தால் நீங்கள் நகர மன்றத்தை நிர்வகிக்க முடியும். அரசாங்கத்தின் திட்டங்களையும் கொள்கைகளையும் சரிபார்ப்பதுதான் உங்கள் நோக்கமாக இருந்தால், நீங்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டாலும் அதை நிறைவேற்றலாம்,” என்றும் அவர் விவரித்தார்.

இதற்கிடையே, நேற்றுக் காலை செம்பவாங் குழுத் தொகுதியில் போட்டியிடும் மசெக அணியின் வேட்பாளர்களான திரு ஓங், டாக்டர் லிம் வீ கியாக், திரு விக்ரம் நாயர், திருவாட்டி போ லி சான், திருவாட்டி மரியம் ஜாஃபர் ஆகியோர் நேற்றுக் காலை ‘செம்பவாங்கை சிறப்பானதாக்குங்கள்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட மின்-பிரசாரத்தில் உரையாற்றி, அக்குழுக் தொகுதியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி குடியிருப்பாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!