அமைச்சர் டெஸ்மண்ட் லீ : சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் சிங்கப்பூரின் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நெருக்கடி காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதை ஒப்புக்கொண்ட அமைச்சர் லீ, அவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் செயல்படுத்தி வரும் ஆதரவுத் திட்டங்களையும் விவரித்தார்.

குறிப்பாக, எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள, குறைந்த வருமானக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிய அவர், ‘எஸ்ஜி கேர்ஸ்’ சமூகக் கட்டமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்கள் 550 பேர் கடந்த மாதத்தில் இருந்து அந்தக் குடும்பங்களுக்குக் கைகொடுத்து வருவதாக திரு லீ கூறினார்.

“இரு வாரங்களில், அவர்கள் வாடகை வீடுகளில் வசிக்கும் 1,800 குடும்பங்களைச் சென்றடைந்து, கூடுதல் ஆதரவுக்காக 600க்கு மேற்பட்ட குடும்பங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குப் பரிந்துரைந்துள்ளனர்,” என்றார் அமைச்சர்.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் ‘காம்கேர்’ திட்டத்திற்கு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைக் காட்டிலும் கூடுதலாக 30% விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேலை தொடர்பான காரணங்களால் திடீரென நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்குக் கைகொடுக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு லீ சொன்னார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், தற்காலிக நிவாரண நிதியாக 450,000 சிங்கப்பூரர்களுக்கு மொத்தம் $225 மில்லியன் வழங்கப்பட்டது. கொவிட்-19 ஆதரவு மானியம் கோரி வந்த 35,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டத்திற்கு 150,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அமைச்சர் லீ கூறினார்.

மக்கள் செயல் கட்சியின் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உளவியல், உணர்வு ரீதியான நல்வாழ்வு குறித்தும் பேசிய திரு லீ, அதற்காக தேசிய பராமரிப்பு நேரடித் தொலைபேசி எண், மனநலம் தொடர்பான அனைத்து வளங்களுடன் கூடிய ‘mindline .sg’ இணையத்தளம், இந்த விவகாரம் தொடர்பில் மக்களின் கருத்தைக் கேட்டறிவதற்காக புதிய ‘இளையர் மனநல நல்வாழ்வுக் கட்டமைப்பு’ போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தேசிய பராமரிப்பு நேரடித் தொலைபேசி எண்ணுக்குக் கிட்டத்தட்ட 23,000 அழைப்புகள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா நோய்ப் பரவல் காலகட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

“மார்ச் மாதத்திலும் அதற்கு முன்பும் இருந்ததைக் காட்டிலும் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் சென்ற ஏப்ரல், மே மாதங்களில் பெரியவர்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சேவைகளுக்குக் கூடுதலாக 7% அழைப்புகள் வந்தன. அதன்பிறகு, அத்தகைய அழைப்புகளின் மாதாந்திர சராசரி 30% அதிகரித்துள்ளது,” என்றார் அமைச்சர் லீ.

அது மிக முக்கியமான பிரச்சினையாக நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் அதன்மீது அதிக கவனம் செலுத்துவர் என்றும் தெரிவித்தார்.

வீடில்லாதோர் குறித்துப் பேசியபோது, நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது கண்ட இடங்களில் தூங்கிய 500 பேருக்கு மேல் உதவி வழங்கப் பட்டிருப்பதாகவும் திரு லீ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!