அமைச்சர் இங் சீ மெங்: சமூக வேலைவாய்ப்புச் சந்தைகள் மூலம் உதவி

கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்தியுள்ள சவால்களை சிங்கப்பூரர்கள் கடந்து செல்ல உதவும் வகையில் சமூக வேலைவாய்ப்புச் சந்தைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறி இருக்கிறார்.

இந்த மாதத்தில் பொங்கோல், செங்காங், ஹவ்காங், ஜூரோங், வெஸ்ட் கோஸ்ட் ஆகிய வட்டாரங்களில் சமூக வேலைவாய்ப்புச் சந்தைகள் நடத்தப்பட்டதாக திரு இங் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று நெருக்கடி பலதரப்பட்ட தொழில்துறைகளிலும் பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சார்ந்த ஊழியர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியாகக் கூறினார் பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு இங்.

அத்துடன், மேலும் ஆட்குறைப்பு இருக்கலாம் என்றும் குறிப்பாக மீட்சித்தன்மையுடைய தொழில்துறைகளிலும்கூட அது நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஊழியர்கள் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பது குறித்தும் அல்லது வேலை போனால் அவர்களுக்குப் புதிய வேலை தேடித் தருவது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்,” என்றார் அமைச்சர் இங்.

‘எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்கள் தொகுப்புத்’ திட்டம் மூலமாக இதுவரை 12,000 வேலைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுள் கிட்டத்தட்ட 70% பொதுத் துறையைச் சேர்ந்தவை என்றும் சுட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வேலைவாய்ப்பு, வேலைத் தகுதிக் கழகத்தில் நடந்த வேலைவாய்ப்புச் சந்தையில் 7,000 வேலைகள், 3,000 வேலைப் பயிற்சிகள், 6,000 பயிற்சி வாய்ப்புகள் ஆகியவை இருந்ததாகவும் திரு இங் சொன்னார்.

40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதியாக அரசாங்கம் 1,500 வெள்ளி வரை வழங்கி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.