மின்னிலக்க பிரசாரத்துக்குப் பிறகு இன்று ‘நெருக்கடிநிலை’ தேர்தல்

வீ. பழனிச்சாமி

இணை ஆசிரியர்

பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2001ஆம் ஆண்டில் நெருக்கடி காலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு இன்று வாக்காளர்கள் மற்றொரு நெருக்கடி காலத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லவிருக்கின்றனர்.

2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் 84 இடங்களில் 29க்கு மட்டும்தான் போட்டி இருந்தது. அந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 75.3% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றது.

ஒவ்வொரு பொதுத் தேர்தலும் சிங்கப்பூர் அரசியலில் ஒரு மைல்கல்லாக இருந்து வந்துள்ளது. 1988க்குப் பிறகு 2006 பொதுத் தேர்தலில்தான் ஆளும் கட்சி வேட்புமனுத் தாக்கல் நாளன்றே ஆட்சியைப் பிடிக்கவில்லை. அந்த ஆண்டு 84 இடங்களில் 47க்குப் போட்டி இருந்தது. அந்தத் தேர்தலில் மசெக 66.6% வாக்குகளுடன் வெற்றி பெற்றது.

2011 பொதுத் தேர்தலில் 87 இடங்களில் 82க்குப் போட்டி இருந்தது. அந்தத் தேர்தலில் மசெகவுக்கு வாக்காளர்களின் ஆதரவு 60.1 விழுக்காடாகக் குறைந்தது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்தான் நாடாளுமன்றத்தின் அனைத்து இடங்களுக்கும் போட்டி நிலவியது.

அதில் 89 இடங்களில் மசெக 83 இடங்களைக் கைப்பற்றியது.

இன்றைய பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் 93 இடங்களுக்கும் போட்டி இருந்தாலும் இதற்குமுன் இருந்த தேர்தல்களைக் காட்டிலும் முற்றிலும் புதிய பின்னணியுடன் வேட்புமனுத் தாக்கலும் தேர்தல் பிரசாரமும் அமைந்திருந்தன.

கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதுகாப்பு தூர இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம், பெரிய குழுக்களாக மக்கள் கூடுவதற்குத் தடை, கைகுலுக்குவதற்குத் தடை என பலவிதமான கட்டுப்பாடுகள் நடப்பிலிருக்கும் நிலையில், எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களும் வீடு வீடாகவும் சந்தைகளுக்கும் உணவங்காடி நிலையங்களுக்கும் சென்று வாக்காளர்களைச் சந்தித்து, அவர்களின் ஆதரவைத் திரட்டினர்.

மேலும் மெய்நிகர் செய்தியாளர் சந்திப்புகள், காணொளிச் சந்திப்புகள், ஃபேஸ்புக் மூலம் நடத்தப்பட்ட நேரடிச் சந்திப்புகள் என அரசியல் கட்சிகள் தங்கள் ஒன்பது நாள் தேர்தல் பிரசாரத்தை ஒருவழியாக நேற்று முன்தினத்துடன் முடித்துக்கொண்டன.

வாக்களிப்பு நாளான இன்று வழக்கமான தேர்தல் கட்டுப்பாடுகளுடன் கடுமையான கொவிட்-19 பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த ஒன்பது நாள் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களிடத்திலும் வாக்காளர்களிடத்திலும் சில முக்கிய பிரச்சினைகள் விவாதப் பொருளாகின.

கொவிட்-19 தொடர்பான சவால்களைச் சமாளிக்க தங்களுக்கு வலுவான ஆதரவு கொடுங்கள் என்று மசெக வேண்டுகோள் விடுக்க, நெருக்கடி காலச் சவால்களைக் காரணமாக வைத்து ஆளும் கட்சி

வாக்குகளைத் தன்பக்கம் இழுத்து அதீத பெரும்பான்மை பெற முயல்வதாக எதிர்க்கட்சிகள் குறைகூறின.

கொவிட்-19 கிருமித்தொற்றை அரசாங்கம் சரிவர கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட, உலகத்தையே உலுக்கியுள்ள கொரோனா பரவலை சிங்கப்பூர் சிறப்பாகக் கையாண்டு வந்துள்ளது என்று அரசாங்கம் கூறியது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது தெம்பனிஸ் குழுத் தொகுதியிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு மாறியுள்ளது, அத்தொகுதியில் மசெகவின் வெற்றியை உறுதிசெய்யுமா என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

ஆயர் ராஜா தொகுதியில் மசெகவின் நாடாளுமன்ற உறுப்பினராக 26 ஆண்டுகள் பணி ஆற்றிய டாக்டர் டான் செங் போக், இப்போது தனது புதிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்குத் தலைமையேற்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அங்கு திரு டானின் அணியை எதிர்த்து, அமைச்சர்கள் ஈஸ்வரன், டெஸ்மண்ட் லீ ஆகியோர் அடங்கிய மசெக அணி போட்டியிடுகிறது.

தாமும் மூன்றாம் தலைமுறைத் தலைவர்களான மூத்த அமைச்சர்கள் டியோ சீ ஹியன், தர்மன் சண்முகரத்னம் ஆகியோரும் நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்குப் பக்கபலமாக இருப்போம் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருப்பது வாக்காளர்களுக்குத் தெம்பை அளித்துள்ளது.

பழம்பெரும் அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர் கோ சோக் டோங்கும் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங்கும் இம்முறை போட்டியிடவில்லை என்றாலும் அவர்கள் பிரசாரத்தில் பங்கேற்று புதிய வேட்பாளர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களால் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியாது என்று எதிர்க்கட்சிகள் வாதிட, முன்பு இருந்ததைக் காட்டிலும் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இப்போது நாடாளுமன்றத்தில் இடமளிக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு வாக்களிக்கும் முழு உரிமை வழங்கப்பட்டிருப்பதையும் மசெக சுட்டிக்காட்டி இருக்கிறது.

சிங்கப்பூரின் 14வது நாடாளுமன்றத்திற்கு 93 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2.65 மில்லியன் வாக்காளர்கள் இன்று வாக்குச் செலுத்தவுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 1,100 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா கிருமித்தொற்று காரணமாக, வாக்களிப்பின்போது கைச்சுத்திகரிப்பான்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கையுறைகள் என பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

போட்டியிடும் 11 கட்சிகள் சார்பில் 191 வேட்பாளர்கள், சுயேச்சை ஒருவர் என மொத்தம் 192 பேர் களத்தில் இருக்கின்றனர்.

மொத்தத்தில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இந்தப் பொதுத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. எந்தத் தரப்புக்கு வெற்றி என்பது சிந்தித்து வாக்களிக்கவிருக்கும்வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!