‘மக்களின் நன்மதிப்பு எங்களிடம்’

கொவிட்-19 கிருமித்தொற்று முடிவுறாத நிலையில் இத்தேர்தலை மசெக தொடங்கியுள்ளது என்று மக்கள் குரல் கட்சியின் தலைவர் லிம் தியன் நேற்று கூறினார்.

அவரது உரையைக் கட்சியின் உறுப்பினர் திரு சிவகுமரன் செல்லப்பா (படம்) நேற்று வசந்தம் ஒளிவழியில் வாசித்தார்.

ஜனநாயக நாடுகளில் ஆகக் குறுகிய பிரசாரக் காலமாக கடந்த ஒன்பது நாட்கள் இருந்ததை அவர் சுட்டினார். பிரசாரம் முடிந்து முடிவு தற்போது மக்களின் கைகளில் உள்ளது என்று சுட்டிய அவர், அடுத்த ஐந்தாண்டுகளின் தொடக்கக் கட்டத்தில் நாம் இருப்பதாக கூறினார்.

கைக்கு எட்டாமல் போகக் கூடிய மத்திய சேமநிதி, வீவக வீடுகளின் குறையும் மதிப்பு, சேவை கட்டணங்கள், போக்குவரத்துக் கட்டணங்கள், மருத்துவ பராமரிப்புச் செலவுகள், ஜிஎஸ்டி போன்றவை அதிகரிப்பதால் மக்கள் இன்னலுக்கு ஆளாவது தொடர்பில் அவர் பேசினார்.

அத்துடன் அதிகரிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மக்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துவது தொடர்பிலும் அவர் பேசினார்.

எந்த ஓர் அரசாங்கமும் சிறந்த அரசாங்கம் அல்ல என்றும் குறைபாடுகள் இருக்கவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை இல்லாத பட்சத்தில் மக்கள் குரல் கட்சி காரணம் கேட்டு சரி செய்யும் என்று அவர் உறுதி அளித்தார். சீரிய முறையில், துணிவுடன் அரசாங்கத்திடம் காரணங்களைக் கேட்டு குறைகளைச் சுட்டிக் காட்டும் என்றும் இது நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல அரசாங்க நடவடிக்கைகள், நகர் அமைப்புகள் போன்ற எல்லாவற்றிலும் இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

தம் கட்சியும் தாமும் மசெகவைவிட நாட்டு மக்களிடம் நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் குரல் கட்சி, மக்களின் குறைபாடுகளைக் கேட்டறியும் என்றும் முதலில் ஜாலான் புசார், பாசிர் ரிஸ்-பொங்கோல், மவுண்ட்பேட்டன் ஆகிய தொகுதிகளில் தங்கள் பணியைத் தொடங்குவர் என்றும் அவர் கூறினார்.

முழுநேர நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் குறைகளைக் கண்டறியும் அமைப்புகளை உருவாக்கி, மக்கள் கலந்துரையாடல் வழி அக்குறைகளைச் சரிசெய்ய முயலும் என்றார் அவர்.