‘முழுநேர எம்.பி.க்கள் தேவை’

மக்கள் அளித்துவரும் ஆதரவால் நாடாளுமன்றத்தில் நியாயத்திற்காகவும் பொறுப்பேற்கும் செயல்பாட்டிற்கும் தொடர்ந்து போராடும் உறுதி பெற்றிருப்பதாக நேற்று தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஸ்பென்சர் இங் (படம்) கூறினார்.

மசெக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் மக்களுக்காக குரல் கொடுக்கமாட்டார்கள் என்று அவர் கூறினார். 9% பொருள் சேவை வரி, அதிக விலையில் வீவக வீடுகள் போன்ற கொள்கைகள் தொடர்பில் அவர்கள் மக்களுக்காக போராடமாட்டார்கள் என்று அவர் உதாரணம் காட்டினார்.

அத்துடன் மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பகுதிநேரமாகத் தான் தங்களின் பணியைச் செய்வர் என்றும் நகர மன்றங்களின் நிர்வாகத்திற்கு வெளியாட்களை நம்பியிருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு மசகோஸ் மற்றும் கல்வி அமைச்சர் திரு ஓங் யி காங் ஆகியோருக்குப் பதிலாக மேலும் சிறந்த அமைச்சர்கள் அப்பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களானால், அவர்கள் மக்களுக்காக முழுநேரமாகச் சேவையாற்றுவர் என்றார். நகர மன்றங்களை நிர்வகிப்பதில் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறார்கள் என்றார் அவர்.

சிங்கப்பூரர்களுக்கு அடிப்படையில் நியாயமற்றதாகவும் தெளிவற்றதாகவும் தோன்றும் கொள்கைகள் குறித்து தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பர் என்றும் அவர் உறுதியளித்தார்.

செம்பவாங், தெம்பனிஸ் குழுத் தொகுதிகளில், மேலும் துரிதமாகச் செயல்படும் மக்கள் கழக அடித்தள ஆலோசகர்கள் இருப்பர் என்றும் அவர் சொன்னார்.

மசெகவுக்கு மேலும் ஐந்தாண்டுகளுக்கு ‘வெற்றுக் காசோலைகளை’த் தரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலாக மக்களின் ஆலோசனையை அடிக்கடி பெறக்கூடிய, மேலும் பொறுப்பான ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் கூறினார்.

அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாதது, அது ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியது என்றும் திரு இங் வலியுறுத்திக் கூறினார்.