பிரதமர் லீ: வலுவான ஆதரவை தருக இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க சிங்கப்பூரர்களுக்கு மக்கள் செயல் கட்சி வேண்டுகோள்

சிங்கப்பூர் வரலாறு காணாத தேர்தலை இன்று சந்திக்கிறது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் ஒவ்வொரு சிங்கப்பூரரின் ஆதரவையும் நாடுவதாக வாக்காளர்களுக்கு மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரும் பிரதமருமான லீ சியன் லூங் தெரிவித்தார்.

உறுதியாகச் செயல்பட்டு நாட்டை மேலும் நல்ல நிலைக்கு வழிநடத்திச் செல்ல மக்கள் வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இன்னும் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த மசெக தன்னால் ஆன அனைத்தும் செய்யும் என்றாலும் இதை தனியாக சாதிக்க முடியாது என்பதால், மக்கள் வலுவான ஆதரவை அளிக்க வேண்டும். ஒவ்வொரு சிங்கப்பூரரின் ஆதரவும் முக்கியம் என்று நேற்றிரவு தொலைக்காட்சியில் மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறினார்.

எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாத சூழலில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து திறமை, அனுபவம், கடப்பாடு கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்து அதற்கு முழு ஆதரவளித்தால்தான் வெற்றிக்கான சிறந்த வாய்ப்பை நாம் உருவாக்க முடியும் என்றார் அவர்.

சிங்கப்பூரை வழிநடத்திச் செல்லக்கூடிய அனுபவமும் யோசனைகளும் கொண்ட, மக்கள் மீது அக் கறையுள்ள, தலைவர்கள் தேவை. நெருக்கடி காலத்திலும் அதற்கு அப்பாலும் தலைவர்களுடன் சேர்ந்து செயலாற்றக்கூடிய, நாட்டின் மீது அக்கறையுள்ள மக்களும் தேவை என பிரதமர் கூறினார்.

பொருளியல் மோசமடையும்

கொவிட்-19 உலகெங்கிலும் தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது. சிங்கப்பூரின் பொருளியல் ஏற்கெனவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிருமிப் பரவலின் முழுமையான பாதிப்பை இனிமேல்தான் சிங்கப்பூர் உணரப் போகிறது.

இந்த நிலையில், மீண்டும் பெரிய அளவிலான கிருமிப் பரவல் ஏற்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வேலைகளையும் வர்த்தகங்களையும் காக்கவேண்டும். அதற்கு வலுவான, திறமையான அரசாங்கம் தேவை என்ற அவர், இவை அனைத்தையும் செய்வதற்கு மக்கள் செயல் கட்சியிடம் உறுதியான திட்டங்கள் உள்ளன.

வேலைகளைக் காப்பதே முன்னுரிமை

தற்போதைய நிலையில் வேலைகளைக் காப்பதே முதற்கடமை என்று கூறிய அவர், அதற்காக முடிந்த அனைத்தையும் மசெக செய்து வருகிறது. இனிமேலும் செய்யும் என உறுதியளித்தார்.

வர்த்தகங்கள் சிங்கப்பூர் ஊழியர்களை வேலையில் வைத்திருக்க வேலை ஆதரவுத் திட்டம் உதவுகிறது. நிறுவனங்கள், குறிப்பாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், கடனும், வாடகைத் தள்ளுபடியும் பெற்று, நெருக்கடியைச் சமாளிக்கவும் அரசாங்கம் உதவுகிறது. இத்தகைய மேலும் பல நடவடிக்கைகளால் ஊழியர்கள் பலரை வேலையில் வைத்திருக்க உதவியுள்ளன.

எனினும், சிங்கப்பூரின் பொருளியலைச் சீரமைக்க சிறிது காலமாகும். உலகளாவிய பொருளியல் மந்தநிலை எதிர்வரும் மாதங்களிலும் நீடிக்கும். இன்னும் பல வேலை இழப்புகள் ஏற்படும் என்றார் திரு லீ.

இந்த நிலையில், ஒவ்வொரு வேலையையும் காப்பாற்ற முடியாவிட்டாலும், ஒவ்வோர் ஊழியருக்கும் மசெக அரசாங்கம் கண்டிப்பாக உதவி செய்யும் என்று அவர் நம்பிக்கை ஊட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அரசாங்கம் ஆதரவு நல்கி வருகிறது. அதற்குமேலும், ஒருவரது வருமானம் அதிகளவு குறைந்திருந்தால், கொவிட்-19 ஆதரவு மானியம் உதவும்.

சுயதொழில் செய்பவர், குறிப்பிட்ட சில துறைகளில் வேலை செய்பவர்களுக்கு எஸ்ஐஆர்எஸ் எனப்படும் வருமான நிவாரணத் திட்டத்தின்கீழ் உதவி பெறலாம்.

வேலைகளை இழந்த ஊழியர்கள் புதிய வேலைகளில் சேரவும், வேலைவாய்ப்பு சந்தைகளுக்கு ஏற்பாடு செய்யவும், பொருத்தமான வேலை தேடித்தரவும் ஒவ்வொரு வட்டாரத்திலும் வேலைவாய்ப்பு நிலையங்களை அமைத்துள்ளோம்.

ஊழியர்கள் புதிய திறன்களைப் பெற்று, மற்ற துறைகளுக்கு மாறிச்செல்ல உதவியாக, வேலைப் பயிற்சிக்கும் பெருமளவு நிதி உதவி வழங்குகிறோம். முயற்சி எடுப்பவர்களுக்கு நிச்சயம் முழு ஆதரவு உண்டு என அவர் உறுதியளித்தார்.

எதிர்வரும் ஆண்டில், பொதுத் துறையில் சுமார் 15,000 வேலை உட்பட கிட்டத்தட்ட 100,000 புதிய வேலைகளையும் பயிற்சி இடங்களையும் உருவாக்குவது இலக்கு. இது, ஓராண்டின் வழக்கமான எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம்.

வேலைப் பயிற்சித் திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். அவற்றில் சில 40 முதல் 50 வயதுகளில் உள்ள ஊழியர்களுக்கானவை. வேலை தேடும் புதிய பட்டதாரிகளுக்கும் வாய்ப்புகள் இருக்கும். பொருளியல் மந்தநிலையில் புதிய வேலைகளை உருவாக்குவது சுலபமல்ல, ஆனால் இந்த இலக்கு மிக முக்கியமானது என்று திரு லீ கூறினார்.

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், தேசிய வேலைவாய்ப்பு மன்றத்தை வழிநடத்துகிறார். வேலை தொடர்பான முயற்சிகளில் தொழிற்சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் ஒன்றுசேர்ந்து முயற்சிகளை பலனை இச்சங்கம் பன்மடங்காக்கும் என்று அவர் சொன்னார்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், பல நிறுவனங்களின் நிறுவனப் பயிற்சிக் குழுக்களின்மூலம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனமாக அணுகி, ஊழியர்களுக்குத் தேவைப்படும் திறன்களை அடையாளம் காண்கிறது. இதன்மூலம் ஊழியர்களுக்குப் பய னளிக்கும் திட்டங்கள் வகுக்கப்படு கின்றன என திரு லீ குறிப்பிட்டார்.

முத்தரப்புப் பங்காளித்துவமே, சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்கப்பூர் அடைந்துவரும் பொருளியல் வெற்றியின் ரகசியம். இம்முறையும் சிங்கப்பூர் பொருளியல் மீட்சி அதுவே துணைநிற்கும் என பிரதமர் கூறினார்.

புதிய முதலீடுகள் முக்கியம்

மக்களுக்காகப் புதிய, மேம்பட்ட வேலைகளை உருவாக்க, புதிய முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்க்கவேண்டும்.

இந்த ஆண்டு, கிருமிப் பரவலுக்கும் உலகளாவிய மந்தநிலைக்கும் இடையில், பொருளியல் வளர்ச்சிக் கழகம் $13 பில்லியன் பெறுமானமுள்ள புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஓராண்டின் வழக்கமான தொகையைவிட அதிகம்.

இந்த முதலீடுகள், அடுத்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கி, நாட்டின் பொருளியல் மீட்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றார் அவர்.

முதலீட்டாளர்களுக்கு சிங்கப்பூர் மீதுள்ள நம்பிக்கையால்தான் பொருளியல் வளர்ச்சிக் கழகம் இதனைச் சாதித்தது.

முதலீட்டாளர்கள் சிங்கப்பூர் ஊழியர்களை மதிக்கிறார்கள். அதற்கு சிங்கப்பூர் ஊழியர்களின் திறன், கடின உழைப்பு, பன்மொழித் திறன், கட்டொழுங்கு ஆகியவைதான் காரணம்.

சிங்கப்பூர் அரசாங்கம் உயர்தரமானது என்பதை வெளிநாட்டினர் அறிவார்கள். முதல்தரமான அமைச்சர்கள் வழிநடத்தும் நேர்மையான, திறன்மிக்க அரசாங்கச் சேவையை சிங்கப்பூர் பெற்றிருக்கிறது.

நம் நாட்டின் சமூகப் பிணைப்பைக் கண்டு வெளிநாட்டினர் வியப்படைகிறார்கள். ஒன்றுபட்ட சிங்கப்பூர் அணியாக அரசாங்கமும் சிங்கப்பூரர்களும் கைகோர்த்து செயல்படுவது அவர்களைக் கவர்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களும் மற்றவர்களும் சிங்கப்பூரின் தேர்தல் முடிவு களைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், நமது சிறப்புத் தன்மைகளை சிங்கப்பூரால் தொடர்ந்து, குறிப்பாக நெருக்கடிநிலையில் கட்டிக்காக்க முடியுமா என்பதை அவர்கள் அறிய விரும்புவார்கள் என்றார்.

நெருக்கடிநிலையில் நடைபெறும் இந்தத் தேர்தலில், சிங்கப்பூர் எதை நம்பியிருக்கிறது என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என உலகுக்குக் காட்டவேண்டும். உடனடியான சவால்களை கையாளுகையில் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாட்டுக்கான பரந்த இலட்சியங்கள்

கிருமிப் பரவலும் மந்தநிலையும் ஒருநாள் அகலும். அப்போது, நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

மக்கள் நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றமடையவும் உதவவேண்டும் என்று கூறிய பிரதமர் லீ, பொருளியல் முன்னேற்றத்திற்கு அப்பால், சிங்கப்பூருக்காக பரந்த லட்சியங்களையும் மசெக வகுத்திருப்பதாகக் தெரிவித்தார்.

மனித நேயம் செழித்தோங்கி, அனைவருக்கும் முழு வாய்ப்புகள் வழங்கும் நல்லிணக்கமிக்க சமுதாயமாகத் திகழ வேண்டும். எதிர்காலத்தில் எல்லோருக்கும் பங்கிருக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் சமுதாயமாகத் திகழ்ந்து, உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்க வேண்டும். தங்களைவிட தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த வாழ்க்கை அமையும் என சிங்கப்பூரர்கள் நம்பக்கூடிய சமூகமாக இருக்க வேண்டும் என்ற அந்த லட்சியங்களை அவர் பட்டியலிட்டார்.

மசெகவின் எதிர்கால திட்டங்கள்

மக்கள் செயல் கட்சியிடம் மேலும் பல திட்டங்கள் உள்ளன என்றார் திரு லீ.

ஒவ்வொரு பிள்ளையின் உள்ளாற்றலும் வெளிப்படும் வகையில் கல்வி முறையை மேம்படுத்துவது, அனைவருக்கும், குறிப்பாக முதியோருக்கு, சுகாதாரப் பராமரிப்பு எளிதில் கிடைப்பதையும் அதைக் கட்டுப்படியாக வைத்திருப்பதையும் உறுதி செய்வது, புதிய வீவக வட்டாரங்கள், பூங்காக்கள், புதிய பெருவிரைவு ரயில் பாதைகள், புதிய டௌன்டவுன் நீர்முகப்பு ஆகியவற்றைக் கட்டுவது ஆகியவற்றுடன் சிங்கப்பூரை மிரட்டலான பருவநிலை மாற்றத்திற்குத் தயார்ப்படுத்துவது ஆகியவை அத்திட்டங்கள்.

மேம்பட்ட சிங்கப்பூரின் ஒரு பகுதியாக இவை அனைத்தையும் அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்வோம் என்றார் திரு லீ.

இந்நிலையை அடைய, சிங்கப்பூர் முதலில் உடனடியாக நெருக்கடி நிலையைக் கடந்து வரவேண்டும். அடுத்த சில ஆண்டுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பது நமக்குத் தெரியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டை வழிநடத்திச் செல்ல திறமையான, அனுபவமும் கடப்பாடும் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு ஆதரவளித்தால் வெற்றிக்கான சிறந்த வாய்ப்பை நமக்காக உருவாக்கிக்கொள்ள முடியும் என்றார் அவர்.

மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூருக்கும் நெருக்கடிநிலைகள் புதிதல்ல. முன்னோடித் தலைமுறையுடன் சேர்ந்து போராடி, சுதந்திரத்தையும் பிரிவினையும் கடந்து வந்தோம். மெர்டேக்கா தலைமுறையுடன் சேர்ந்து செயல்பட்டு, சிங்கப்பூரை மூன்றாம் உலகத் தரத்திலிருந்து முதலாம் உலகத் தரத்திற்கு முன்னேற்றிச் சென்றோம்.

இப்போது, இந்தத் தலைமுறைக்கான நெருக்கடிநிலையை நாம் எதிர்நோக்குகிறோம். இந்தச் சவாலை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்பதே சிங்கப்பூரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. மக்கள் செயல் கட்சி தன்னால் ஆன அனைத்தும் செய்யும் என்றாலும் இதை தனியாக சாதிக்க முடியாது என்பதால், மக்கள் வலுவான ஆதரவை அளிக்க வேண்டும் என்று திரு லீ சியன் லூங் கேட்டுக்கொண்டார்.

இன்று வாக்களிக்கும்போது, மக்கள் செயல் கட்சி மீது மறுபடியும் நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!