மக்கள் செயல் கட்சி வெற்றிமுகம்

பின்னிரவு 2.20 மணி நிலவரப்படி எட்டு தனித்தொகுதிகள் உட்பட 21 இடங்களில் வெற்றி

சிங்கப்பூரின் 14வது நாடாளுமன்றத்திற்கு நேற்று நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களில் மக்கள் செயல் கட்சிக்கு வெற்றிமுகம் காணப்பட்டது.

இம்முறை ஐந்து உறுப்பினர்கள் குழுத்தொகுதிகள் 11, நான்கு உறுப்பினர்கள் குழுத் தொகுதிகள் 6 என 17 குழுத்தொகுதிகளும் 14 தனித்தொகுதிகளுமாக மொத்தம் 31 தொகுதிகளில் 93 எம்.பி. பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. பதினொரு கட்சிகளின் சார்பில் 191 பேர், பைனியர் தனித்தொகுதியில் சுயேச்சையாக ஒருவர் என மொத்தம் 192 வேட்பாளர்கள் தேர்தல் களம் கண்டனர்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 2.65 மில்லியன் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 1,100 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவானதாக, அதாவது 2,565,000 பேர் தங்களது வாக்குகளைச் செலுத்தியதாகத் தேர்தல் துறை தெரிவித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைக் காட்டிலும் இது அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. 2015 தேர்தலில் 93.56% வாக்குகள் பதிவாகின. அதாவது, அத்தேர்தலில் 2,304,331 பேர் வாக்களித்து இருந்தனர்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக கைச்சுத்திகரிப்பான்கள், பாதுகாப்பு இடைவெளி, கையுறைகள், 37.5 டிகிரி செல்சியசுக்கு மேல் காய்ச்சல் இருந்தோருக்கு இரவு 7 மணிக்கு மேல் வாக்களிக்க சிறப்பு நேரம் எனப் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அத்துடன், மூத்த குடிமக்கள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக சுயமாக முத்திரையிடும் பேனாவும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை 6 மணிக்குப் பின்னரும் சில வாக்குச்சாவடிகளில் வழக்கத்தைக் காட்டிலும் நீண்ட வரிசை காணப்பட்டதால் வாக்குப்பதிவு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த அறிவிப்புக்குக் குறைந்தது நான்கு எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப் பட்டபோதும் வாக்களிப்பிலும் வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இடம்பெறாது என்றும் தேர்தல் துறை அறிவித்தது.

கடந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வாக்குப் போக்கு’ நடைமுறை இம்முறையும் பின்பற்றப்பட்டது. அதன்படி, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்குச்சீட்டுகளில் இருந்து நூறை மட்டும் எடுத்து, அதில் வாக்கு நிலவரம் எப்படி என்பது அறிவிக்கப்பட்டது. அதில் 83 இடங்களில் மசெக முன்னிலை பெற்றது.

அல்ஜுனிட் குழுத்தொகுதி, புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதி ஆகியவற்றில் பாட்டாளிக் கட்சி முன்னிலையில் இருந்ததை வாக்குப் போக்கு காட்டியது.

அத்துடன், பல தொகுதிகளில் மசெக வேட்பாளர்களுக்கும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குமான வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததையும் காண முடிந்தது.

புதிய கட்சியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் தலைமையில் அக்கட்சிக் குழு களம் கண்ட வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் கடும் போட்டி நிலவியதை வாக்குப் போக்கு காண்பித்தது. அதில், அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தலைமையிலான மசெக குழு 52% வாக்குகளையும் சிமுக 48% வாக்குகளையும் பெற்றிருந்தன.

இரவு 1.25 மணி முதல் இறுதி முடிவுகள் வெளியாகத் தொடங்கின. முதலாவதாக புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதிக்கான முடிவு அறிவிக்கப்பட்டது. அத்தொகுதி மசெக வேட்பாளரான லியாங் எங் ஹுவா 53.74% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பேராசிரியர் பால் தம்பையா 46.26% வாக்குகளைப் பெற்று, தோல்வியைத் தழுவினார்.

அதேபோல, மெக்பர்சன், பொத்தோங் பாசிர், பைனியர், மேரிமவுண்ட், ஹொங் கா நார்த், பொங்கோல் வெஸ்ட், ராடின் மாஸ் ஆகிய தனித்தொகுதிகளிலும் தஞ்சோங் பகார், ஜாலான் புசார், சுவா சூ காங் ஆகிய குழுத் தொகுதிகளிலும் மசெக வெற்றிபெற்றது.

சிங்கப்பூர் வரலாற்றில் எல்லாத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது இது இரண்டாவது முறை.

கடந்த 2015 பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் களமிறங்கின. கடந்த முறை 89 இடங்களில் மசெக 83 இடங்களை வென்றது. அப்போது அக்கட்சி 69.9% வாக்குகளைப் பெற்றது.

இது, பிரதமர் லீ தலைமையில் மசெக எதிர்கொண்ட நான்காவது பொதுத் தேர்தல். ‘நம் வாழ்க்கை, நம் வேலைகள், நம் எதிர்காலம்’ என்ற முழக்கவரியுடன் அந்தக் கட்சி தேர்தலைச் சந்தித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!