துணைப் பிரதமர் அணிக்கு வெற்றி

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது. துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமையில் களமிறங்கிய மசெக அணி, 100 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 54 வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தது.

அப்போது அத்தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சி அணி 46 வாக்குகளைப் பெற்றிருந்தது.

இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் திரு ஹெங் திடீரென இந்தத் தொகுதியில் மசெக அணிக்குத் தலைமை தாங்கி களமிறங்கினார்.

மசெக அணியில் மாலிக்கி ஓஸ்மான், ஜெசிகா டான், செரில் சான், டான் கியாட் ஹோவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

டேலான் இங் தலைமையில் களமிறங்கிய பாட்டாளிக் கட்சி அணியில் கென்னத் ஃபூ, நிக்கோல் சியா, டெரன்ஸ் டான், அப்துல் ஷரிஃப், அபு ஹாசிம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதற்கு முன் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சிக்கு எதிராக மசெக 60.73% வாக்குகளைப் பெற்று வென்றிருந்தது. அப்போது மசெக அணியின் தலைவராக அப்போதைய மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே இருந்தார்.

அதற்கு முந்தைய 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மசெகவுக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே பயங்கரப் போட்டி இருந்தது. 54.8% வாக்குகளை மசெக வென்றிருந்தாலும் 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து மசெக அணிகளிலிருந்தும் ஆகக் குறைவான வாக்குகளை வென்றிருந்த மசெக அணியாக அது இருந்தது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி முதன்முதலாக 2006ஆம் ஆண்டில் போட்டியிட்டபோது, 36.15% வாக்குகளை மட்டுமே வென்றது.

இறுதியாக மசெக அணி 53,41% வாக்குகளையும் எதிர்த்தரப்பு அணி 46,59% வாக்குகளையும் பெற்றன. துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அணி வென்றது.