லீ: அங் மோ கியோ வாக்காளர்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் கட்டிக்காப்போம்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையில் அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணி 71.91% வாக்கு களுடன் வெற்றி பெற்றது.

அதே தொகுதியில் 2015ல் பிரதமர் தலைமையில் போட்டியிட்ட அணி 78.64% வாக்குகளைப் பெற்றிருந்தது என்றாலும் இந்தத் தேர்தலில் திரு லீக்கு மிகத் தெளிவாக மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதையே அவருக்குக் கிடைத்திருக்கும் அதிக அளவிலான வாக்குகள் புலப்படுத்துகின்றன.

நடந்து முடிந்த தேர்தலே, பிரதமர் என்ற முறையில் திரு லீ தலைமையில் மக்கள் செயல் கட்சி எதிர்நோக்கிய கடைசித் தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. திரு லீக்கு 2022ல் 70 வயது ஆகும். 70 வயதுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்று தான் நம்புவதாக 2012ல் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

திரு லீ, 2004 ஆகஸ்ட் முதல் 16 ஆண்டு காலமாக பிரதமராக இருந்து வருகிறார். அங் மோ கியோ குழுத்தொகுதியின் ஓர் அங்கமான டெக் கீ பகுதியை 1984 முதல் அவர் பிரதிநிதித்து வருகிறார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை 2 மணி அளவில் திரு லீ தம் மனைவியுடன் மசெகவின் டெக் கீ கிளை அலுவலகத்திற்கு வந்தார்.

அவரை பேராதரவுடன் தொண்டர்கள் வரவேற்றனர். பிறகு இந்தக் குழுத்தொகுதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் பேசினார்.

அங் மோ கியோ குடியிருப்பாளர்கள் அளித்த ஆதரவுக்காக திரு லீ நன்றி தெரிவித்துக்கொண்டார். குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற தங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதற்காகவும் அவர் மக்களுக்கு நன்றி கூறினார். மலாய், மாண்டரின், ஆங்கில மொழிகளில் திரு லீ பேசினார்.

“நீங்கள் எங்களுக்குப் பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டு உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குத் தலைசிறந்த சேவையாற்றுவோம்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தல் நெருக்கடியான ஒரு தேர்தல் என்று முன்னதாக திரு லீ குறிப்பிட்டு இருந்தார்.

2020 பொதுத் தேர்தலை நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தேர்தல் என்று குறிப்பிட்ட அவர், நம் வாழ்வு, நம் வேலை, நம் எதிர்காலம் எல்லாமே இந்தத் தேர்தல் முடிவில் தான் இருக்கிறது என்றார்.

இந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 27 புதுமுகங்களைக் களமிறக்கி இருந்தது. அவர்களில் திருவாட்டி இங் லிங் லிங், திருவாட்டி நாடியா அகம்மது சாம்டின், ஆகிய இருவரும் அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் தலைமையிலான மசெக அணியில் இடம்பெற்றிருந்தார்கள்.

இந்தத் தொகுதியில் சீர்திருத்தக் கட்சி அதன் தலைமைச் செயலாளர் திரு கென்னத் ஜெயரத்னம் தலைமையில் களம் இறங்கியது.

அங் மோ கியோ குழுத்தொகுதியில் மொத்தம் 185,465 வாக்காளர்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள 17 குழுத்தொகுதிகள், 14 தனித்தொகுதிகள் அனைத்திலும் அங் மோ கியோ தொகுதிதான் ஆகப் பெரிய தொகுதியாகும்.

தேர்தல் முடிவுக்குப் பின் கருத்துரைத்த சீர்திருத்தக் கட்சி தலைமைச் செயலாளர் திரு ஜெயரத்னம், தங்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் அதை மேலும் பலப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!