13 தனித்தொகுதிகளைக் கைப்பற்றிய மசெக வேட்பாளர்களின் வெவ்வேறு அனுபவங்கள்

தேர்தல் களம் கண்ட 14 தனித்தொகுதிகளில் வெற்றி பெற்ற பாதியளவு வேட்பாளர்களுக்கு வெவ்வேறு வகையில் புதிய அனுபவங்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக இம்முறை முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைமுறை அலுவலகத்தின் முன்னாள் குழுத் தலைவர் யிப் ஹோன் வெங், சிங்கப்பூரின் முதல் பெண் பிரிகேடியர் ஜெனரல் கான் சியோப் ஹுவாங் ஆகிய இருவரும் முறையே இயோ சூ காங், மேரிமவுண்ட் தனித்தொகுதிகளில் வென்றுள்ளனர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (சிமுக) கெய்லா லோ மற்றும் ஆங் யோங் குவான் ஆகியோரை முறையே அவர்கள் தோற்கடித்தனர்.

முதல் தேர்தல் களம் என்பதுடன் ஒருவருக்கு ஒருவர் நேரடிப் போட்டி என்பதும் மசெக வெற்றி வேட்பாளர்களுக்குப் புதிய அனுபவங்களைத் தந்திருக்கும்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவது என்பது எளிதானதல்ல என்று திரு யிப் ஹோன் வெங், 43, பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மொத்தம் 24,256 வாக்குகள் (61%) பெற்ற அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கெய்லா லோவைத் தோற்கடித்தார்.

சிமுகவின் திருவாட்டி லோ, 43, முன்னாள் சிறைத்துறை அதிகாரி மற்றும் பட்டயக் கணக்காய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மசெகவின் சில அனுபவசாலிகளும் தனித்தொகுதிகளில் வாகை சூடியுள்ளனர். ஹென்றி குவெக், பேட்ரிக் டே, மெல்வின் யோங், லியாங் எங் ஹுவா மற்றும் சுன் சூலிங் ஆகியோர் முறையே கெபுன் பாரு, பைனியர், ராடின் மாஸ், புக்கிட் பாஞ்சாங், பொங்கோல் வெஸ்ட் ஆகியவற்றில் வென்றுள்ளனர். குறிப்பாக, ஏற்கெனவே குழுத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள் இவர்கள். இவர்களுக்கும் தனித்தொகுதி தேர்தல் களம் புதிய அனுபவங்களைத் தந்திருக்கும்.

ஏமி கோர் (ஹோங் கா நார்த்), கிரேஸ் ஃபூ (யூஹுவா), லிம் பியோவ் சுவான் (மவுண்ட்பேட்டன்), டின் பெய் லிங் (மெக்பர்சன்), சீத்தோ யி பின் (பொத்தோங் பாசிர்), முரளி பிள்ளை (புக்கிட் பாத்தோக்) ஆகியோரும் மசெகவின் தனித்தொகுதி வெற்றியாளர்கள். ஆக, இம்முறை தேர்தல் நடைபெற்ற 14 தனித்தொகுதிகளில் 13 இடங்களை மசெக கைப்பற்றினாலும் வாக்கு வித்தியாசத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

2015 தேர்தலில் 13 தனித்தொகுதிகள் மட்டுமே இருந்தன. அவற்றில் 12ல் வெற்றி பெற்ற மசெக வேட்பாளர்களில் எழுவர் 70 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகளை அறுவடை செய்தனர்.

தற்போது நால்வர் மட்டுமே அந்த விகிதத்தைத் தொட்டுள்ளனர். மெல்வின் யோங் (ராடின் மாஸ்) 74%, லிம் பியோவ் சுவான் (மவுண்ட்பேட்டன்) 73.80%, டின் பெய் லிங் (மெக்பர்சன்) 71.70%, கிரேஸ் ஃபூ (யூஹுவா) 70.50% ஆகியோரே அந்த நால்வர்.

தொகுதி எல்லை மறுவரையறைக்குப் பின்னர் இத்தேர்தலில் அறிமுகம் கண்ட இயோ சூ காங், கெபுன் பாரு, மேரிமவுண்ட், பொங்கோல் வெஸ்ட் ஆகிய நான்கு தனித்தொகுதிகளிலும் மசெக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!