ஆங் யோங் குவான்: உற்சாகமூட்டியதற்கு நன்றி

மேரிமவுண்ட் தனித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆங் யோங் குவான் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொகுதி உலா மேற்கொண்டபோது தம்மை உற்சாகமூட்டிய குடியிருப்பாளர்களுக்கு அவர் தமது ஃபேஸ்புக்கில் நன்றி தெரிவித்துள்ளார்.

“நீங்கள் அனைவரும் என்னை உற்சாகமூட்டினீர்கள். தேர்தல் பிரசாரம், தொகுதி உலாவின்போது நீங்கள் எனக்குக் காட்டிய ஆதரவுக்கு கைமாறாக நாடாளுமன்ற உறுப்பினராக உங்களுக்குச் சேவையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

“இருப்பினும் எனக்குப் பக்க பலமாக இருந்த உங்கள் அனைவருக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று மனநல மருத்துவரான டாக்டர் ஆங், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி கான் சியாவ் ஹுவாங்கை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் ஆங் 44.96 வாக்குகளைப் பெற்றார்.