திரு கோ: எதிரணித் தலைவரை அறிவித்தது ‘குறிப்பிடத்தக்க முடிவு’

பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கை நாடாளுமன்றத்தின் எதிரணித் தலைவராக  பிரதமர் லீ சியன் லூங் நேற்று அறிவித்தார். இந்தப் பொறுப்பை ஆற்றுவதற்கான வளங்களும் பணியாளர்களும் இவருக்கு அளிக்கப்படும். திரு சிங்கின் கட்சி தற்போது பத்து நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பன்முகத்தன்மை வாய்ந்த குரல்களை மக்கள் விரும்புவதை இந்தத் தேர்தலின் முடிவுகள் தெளிவாகக் காட்டுவதாக பிரதமர் லீ  சியன் லூங், இன்று காலை இணையச் சந்திப்பு வழியாக  செய்தியாளர்களிடம் கூறினார். அரசாங்கம் பொறுப்பை விட்டு விலகும் சாத்தியம் ஏற்பாட்டால் அப்பொறுப்பை ஏற்கக் கூடிய அதிக பெரும்பான்மையைப் பெற்ற எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையின் தலைவருக்கு 'எதிரணித் தலைவர்' என்ற அதிகாரபூர்வ பட்டம் வழங்கப்படுகிறது.  

இந்த பட்டத்தை வழங்க பிரதமர் லீ எடுத்துள்ள முடிவு குறிப்பிடத்தக்கது என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் அரசாங்கத்தைச் சரிபார்க்கும் பணியைக் கடந்து எதிர்க்கட்சி எம்பிக்களும் தொகுதியில்லா எம்பிக்களும் தங்களது மாற்றுக்கருத்துகளையும் தீர்வுகளையும் முன்வைக்கலாம் என்று அவர் அந்தப் பதிவில் கூறினார். 

'அதிகாரபூர்வமற்ற எதிரணித் தலைவர்' என்ற பட்டம் முதன்முதலாக 1992ல் திரு சியாம் சீ டோங்கிற்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.